லாரன்ஸ் வோங்: சுகாதாரப் பராமரிப்புத் துறை செயலாற்றல் பெருக கால அவகாசம் இருக்கும்
சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு வளங்களுக்கு இப்போது கடுமையான நெருக்குதல் ஏற்பட்டு இருக்கிறது.
சூழ்நிலையை நிலைப்படுத்தவும் தவிர்த்துக் கொள்ளக்கூடிய மரணங்களைத் தடுக்கவும் புதிய கடுமையான கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்து இருக்கிறார்.
கொவிட்-19 தொற்று பரவும் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் புதிய கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்துள்ளன.
இதன் காரணமாக சிங்கப்பூர் தன்னுடைய சுகாதாரப் பராமரிப்புத் துறையின் செயலாற்றலை மேலும் பலப்படுத்த போதிய கால அவகாசம் கிடைக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாள் ஒன்றுக்கு 5,000 அல்லது அதற்கும் அதிகம் பேருக்குத் தொற்று ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்க போதிய அளவிற்கு ஆற்றலைப் பெற்றிருக்கும் வகையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ள சிங்கப்பூருக்கு காலஅவகாசத்தை இந்தக் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தித் தரும் என்றார் அவர்.
"நம்முடைய சுகாதாரப் பராமரிப்பு முறை பாதிப்புக்கு உள்ளாகாமல் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வரவேண்டும். முழு சுகாதாரப் பராமரிப்பு முறைக்கும் அளவுக்கு அதிக சுமை ஏற்பட்டு, அதனால் ஏற்படக்கூடிய தேவையற்ற மரணங்களைத் தவிர்த்துக்கொள்ள நாம் விரும்புகிறோம்," என்று புளூம்பர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் திரு வோங் தெரிவித்தார்.
"ஆகப் புதிய அலை தலைகாட்டி இருக்கும் காலகட்டத்தில், சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு முறையும் சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்களும் உண்மையிலேயே ஏராளமான நெருக்கடிகளையும் மன உளைச்சலையும் எதிர்நோக்கி வருகிறார்கள். இதன் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டி இருப்பதாக நாம் கருதுகிறோம்," என்று திரு வோங் கூறினார்.
கொவிட்-19 தொற்றைத் தவிர்த்துக்கொள்ள ஒரு மாத கால புதிய கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்துள்ளன.
அன்றாட தொற்று 2,000 ஆகக் கூடி உள்ளது. கொவிட்-19 நோயாளிகளில் 0.2 விழுக்காட்டினருக்கு மட்டும் தீவிர சிகிச்சை தேவைப்படும்நிலை ஏற்பட்டாலும்கூட அதனால் சிங்கப்பூரின் மருத்துவமனை வளத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுவிடும் என்று பேட்டியில் திரு வோங் குறிப்பிட்டார்.
"அந்தச் சிறிய எண்ணிக்கையிலான நோயாளிகளுக்குச் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டுமானால் மருத்துவமனைகள் கொவிட்-19 நோயாளிகளில் ஏறத்தாழ 10 விழுக்காட்டினரை வார்டில் சேர்த்துக்கொண்டு அணுக்கமாகக் கண்காணிக்க வேண்டிய தேவை ஏற்படும்.
"நாள் ஒன்றுக்கு 5,000 பேர் பாதிக்கப்பட்டால் அவர்களில் 10 விழுக்காட்டினர் அதாவது 500 பேர் மருத்துவமனையில் ஒரு வார காலம் தங்கினால் ஏராளமான மருத்துவமனைப் படுக்கைகள் தேவைப்படும்," என்று அமைச்சர் விளக்கினார்.
சிங்கப்பூர் மருத்துவ வசதிகளை அதிகரிக்கப் பாடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவது என்ற இப்போதைய ஆகப் புதிய முடிவு, ஒட்டுமொத்தமாக சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவு என்று, பல அமைச்சுகளை உள்ளடக்கிய கொவிட்-19 சிறப்புப் பணிக்குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான திரு வோங் தெரிவித்தார்.

