கொவிட்-19 தொற்றுச் சூழலில் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க உதவும் வகை யில், தகுதிபெறும் ஏறத்தாழ 160,000 சிங்கப்பூரர்களுக்கு அடுத்த மாதம் $100 மளிகைப்பொருள் பற்றுச்சீட்டு கொடுக்கப்படும்.
இந்த உதவி, சென்ற ஆண்டில் அறிவிக்கப்பட்ட கருணை, ஆதரவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இடம்பெறுகிறது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ஓரறை மற்றும் ஈரறை வீடுகளில் வசிக்கின்ற, ஒன்றுக்கும் அதிக வீடுகளைக் கொண்டிராத, இந்த ஆண்டு 21 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் அந்தப் பற்றுச்சீட்டு கிடைக்கும் என்று நிதி அமைச்சு நேற்று அறிக்கையில் தெரிவித்தது.
மளிகைப்பொருள் பற்றுச்சீட்டுத் திட்டம் மொத்தம் ஏறத்தாழ $63 மில்லியன் மதிப்புள்ள உதவிகளைத் தகுதி உள்ளவர்களுக்கு வழங்குகிறது.
சிங்கப்பூரர்கள், சென்ற ஆண்டு $300 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளைப் பெற்றனர்.
இந்த ஆண்டு பற்றுச்சீட்டுகள் அக்டோபர் 2ஆம் தேதி முதல் அடுத்த மாதம் முழுவதும் சனிக்கிழமைகளில் தகுதி உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
அந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி ஜயண்ட் ஃபேர்பிரைஸ், பிரைம் சூப்பர் மார்கெட், ஷெங் சியோங் ஆகியவை உள்ளிட்ட பேரங்காடிகளில் மளிகைப்பொருட்களை வாங்கலாம்.
மளிகைப் பற்றுச்சீட்டுகள் சென்ற ஆண்டு வீவக புளோக்குகளில் இருக்கும் அஞ்சல் பெட்டிகளில் சேர்க்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன. அதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. ஆகையால் இந்த ஆண்டு பற்றுச்சீட்டுகள் வீடுகளுக்கே நேரடியாகக் கொடுக்கப்படும்.
எடுத்துக்காட்டாக, சைனா டவுன், குவீன்ஸ்டவுன், புக்கிட் மேரா ஆகிய பகுதிகளில் உள்ள தகுதிபெறும் குடும்பங்களுக்கு அக்டோபர் 2ஆம் தேதி நேரடியாகப் பற்றுச்சீட்டுகள் விநியோகிக்கப்படும்.
வீட்டில் அப்போது யாரும் இல்லை என்றால் அக்டோபர் 4ஆம் தேதிக்கும் அக்டோபர் 8ஆம் தேதிக்கும் இடையில் பற்றுச்சீட்டுகளைக் கொடுக்க மேலும் ஒரு முயற்சி இடம்பெறும்.
அப்போதும் அதைப் பெற்றுக்கொள்ள வீட்டில் யாரும் இல்லை என்றால் வீட்டில் ஓர் அறிவிப்பு அட்டை வைக்கப்படும்.
அதில் குறிப்பிடப்படும் அஞ்சல் அலுவலகத்தில், 10 வேலை நாட்களுக்குள் பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

