மத்திய சேம நிதி கணக்குகளுக்கான குறைந்தபட்ச வட்டிவிகிதம் 2022 டிசம்பர் 31வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. சிறப்பு, மருத்துவக் கணக்கு, ஓய்வுக் கணக்குகளில் உள்ள பணத்திற்குக் குறைந்தபட்சம் 4 விழுக்காடு வட்டி அடுத்த ஆண்டு இறுதிவரை கிடைக்கும் என்று மத்திய சேம நிதிக் கழகமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் நேற்று தெரிவித்தன.
இந்த வட்டிவிகிதம், இந்த ஆண்டு 31ஆம் தேதியுடன் காலாவதியாக இருந்தது.
55 வயதுக்குக் குறைந்த வயதுள்ள மசே நிதி உறுப்பினர்கள் தங்கள் மொத்த இருப்பில் முதல் $60,000 தொகைக்கு 5% வரை வட்டி பெறுவார்கள். இந்த வட்டி, அவர்களின் சாதாரணக் கணக்கில் உள்ள $20,000 வரைப்பட்ட தொகைக்குக் கிடைக்கும். அவர்கள் சாதாரண கணக்குப் பணத்திற்குத் தொடர்ந்து ஆண்டுக்கு 3.5% வட்டியை ஈட்டுவார்கள்.
சிறப்பு, மருத்துவச் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்திற்கு ஆண்டுக்கு 5% வட்டி உண்டு.
55 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் மொத்த இருப்பில் முதல் $30,000க்கு ஆண்டுக்கு 6% வட்டி கொடுக்கப்படும்.
இந்த வட்டி அவர்களின் சாதாரண கணக்கில் $20,000 வரைப்பட்ட தொகைக்கும் கிடைக்கும். அடுத்த $30,000 தொகைக்கு 5% வட்டி வழங்கப்படும்.
உறுப்பினரின் சாதாரண கணக்கில் உள்ள பணத்திற்குக் கிடைக்கும் கூடுதல் வட்டி அவர்களின் சிறப்பு, ஓய்வு கால கணக்கிற்கு மாற்றப்படும்.

