விமானப் போக்குவரத்துத் துறை யைச் சேர்ந்த முதலாளிகள், தங்களுடைய ஊழியர்களுக்காக மேலும் ஆறு மாத கால சம்பள ஆதரவைப் பெறுவார்கள்.
கொவிட்-19 காரணமாக ஏற்பட்டு உள்ள பாதிப்பில் இருந்து மீண்டுவர ஏதுவாக அவர்களுக்கான இந்த ஆதரவு 2022 மார்ச் வரை நீட்டிக்கப்படுகிறது.
'விமானப் போக்குவரத்துத் துறை ஊழியர்களைத் தொடர்ந்து வேலையில் வைத்திருப்பதற்கான மானியம்' என்று குறிப்பிடப்படும் அந்தத் திட்டம், $130 மில்லியன் அளவுக்கு உதவி வழங்குகிறது.
அதனால் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நன்மையடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தது.
தகுதிபெறும் நிறுவனங்கள், தங்களிடம் வேலை பார்க்கும் ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் அல்லது நிரந்தரவாசிக்கும் உரிய மாத மொத்தச் சம்பளத்தில் முதல் $4,600 தொகைக்கு 30 விழுக்காட்டு மானிய ஆதரவைப் பெறும். இந்த ஆதரவு இந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர்வரை கிடைக்கும்.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை அதே தொகைக்கான ஆதரவு 10% ஆக இருக்கும்.
சாங்கி விமான நிலையத்தில் 2021 செப்டம்பர் நிலவரப்படி மொத்தப் பயணிகள் போக்குவரத்து, கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலையில் 3.6 விழுக்காடு அளவுக்குத்தான் இருந்தது.
விமான நிறுவனங்கள் மனிதவளத்தைக் குறைத்துவிட்டன. கொவிட்-19 தலைகாட்டி 20 மாதங்கள் ஓடிவிட்ட நிலையில், படுமோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு துறையாக இன்னமும் இந்தத் தொழில்துறை இருந்து வருகிறது என்று ஆணையம் கூறியது.

