எல்லைகள் மெல்லத் திறந்து அனைத்துலகப் பயணங்கள் மீண்டும் தொடங்கினாலும், மெய்நிகர் மூலமான சுற்றுப்பயணத் திட்டங்களும் நேரடி, மெய்நிகர் அனுபவங்கள் இரண்டும் கலந்த பயணத் திட்டங்களும் தொடரும் என்று வர்த்தகத் தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் கூறியுள்ளார்.
கொவிட்-19 நோய்ப் பரவலுக்குப் பிந்தைய உலகத்தில் நேரடிப் பயணங்கள் ஒருபுறம் இருக்க, அவை முழுமைபெற இத்தகைய மெய்நிகர் திட்டங்கள் உதவும் என்று அவர் கூறினார்.
கொவிட்-19 நோய்ப்பரவல் அத்தகைய மாற்றத்தை உருவாக்கிவிட்டது. நோய்ப்பரவலால் பற்பல எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் தொழில்நுட்பம் சார்ந்த இத்தகைய தீர்வுகள் தேவை என்றார் திரு டான்.
கிருமித்தொற்று காரணமாக மெய்நிகர் சுற்றுலாத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. உதாரணத்துக்கு 2020ஆம் ஆண்டுக்கான ஸ்டாண்டர்ட் சார்ட்டட் நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயம் நேரடி அனுபவமும் மெய்நிகர் தொழில்நுட்பமும் கலந்த நிகழ்வாக அமைந்தது. ஓட்டப் பந்தயப் பாதைகள் மெய்நிகர் வடிவிலும் உருவாக்கப்பட்டன. பங்கேற்ற ஓட்டப்பந்தய வீரர்கள் மெய்நிகர் அவதாரங்கள் அல்லது வடிவங்களை உருவாக்கி, நேரடியாக ஓடுபவர் களுடன் அதே நேரத்தில் போட்டியிட்டனர்.
ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட 13,000 பேரில் 35 விழுக்காட்டினர் வெளிநாடுகளில் இருந்தவர்கள்.
சுற்றுலா நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்பத் திறன்களை மேம் படுத்தி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக திரு டான் கூறினார்.
எல்லைகளைத் திறப்பதற்குத் தயாராக சுற்றுலாத் துறைக்கு உதவும் பொருட்டு, சிங்கப்பூர் சுற்றுலாத் துறை துரிதப்படுத்துதல் திட்டம் வரும் 2023ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படும் என்றார் அவர்.
சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் நடத்தும் இத்திட்டம் சுற்றுலாத் துறைக்கான தொழில்நுட்பத் தீர்வு களைத் தரும் முன்னோடித் திட்டங்களை உருவாக்குகிறது. இதில் சுற்றுலாத் துறை நிறுவனங்களும் தொழில்நுட்ப நிறுவனங்களும் இணைந்து செயல்படுகின்றன.

