எதிர்பாராத வேலை இழப்பு, நோய் ஆகியவற்றால் தங்கள் நிதித் தேவைகளைச் சமாளிக்க சிங்கப்பூரில் உள்ள 54% மக்கள் தடுமாறுவார்கள் அல்லது சமாளிக்க முடியாமல் போவார்கள் என்று கருத்தாய்வு ஒன்று கூறுகிறது.
புருடென்ஷியல் நிறுவனத்தின் ஆணைபெற்று மேற்கொள்ளப்பட்ட அந்தக் கருத்தாய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
அதில் கடந்த மே, ஜூன் மாதங்களில் 1,218 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. சிங்கப்பூரர்கள் 100 வயது வரை வாழும் சூழலில், ஓய்வுக் காலத்துக்குச் சேமித்துவைக்கும் தங்களின் ஆற்றல், உடல்நலம், நல்வாழ்வு ஆகியவற்றை கொவிட்-19 நோய்ப்பரவல் பாதித்துள்ளதா என்பதை ஆய்வு ஆராய்ந்தது.
ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 47 விழுக்காட்டினர், நோய்ப் பரவல் தொடங்கியதிலிருந்து தங்கள் நிதி நிலவரம் மோசமடைந்துள்ளதாகக் கூறினர். அந்தத் தரப்பினரில் ஐந்தில் ஒருவர், தங்கள் நிதி நிலைமை குறிப்பிடத்தக்க அளவு மோசமடைந்ததாகத் தெரிவித்தனர்.
குறிப்பாக, 35 முதல் 54 வயதினர் மற்ற வயதுப் பிரிவினரைவிட அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை கூறியது.
குறைந்த வட்டி விகிதம், வாடகை, உணவு ஆகியவற்றின் விலையேற்றம், பணவீக்கம் பற்றிய கவலை ஆகியவை நிறைந்த தற்போதைய சூழலில் பலராலும் திட்டமிட்டபடி தொடர்ந்து சேமிக்க முடியாமல் போகும் என்று சிங்கப்பூர் முதலீட்டு நிர்வாகச் சங்கத்தின் தலைவர் திருவாட்டி சூசுன் சோ கூறினார்.
அத்துடன், இந்த 35 முதல் 54 வயதினரில் 45 விழுக்காட்டினர் மன அழுத்தம் அதிகமாகிவிட்டதாகக் கூறினர். இப்பிரிவினரில் மூன்றில் ஒரு பங்கினர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.
மேலும், ஆய்வில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ததாகக் கூறினர். அவர்களில் பாதி பேர்தான் இது தங்களுக்குப் பிடித்துள்ளதாகக் கூறினர்.
ஆய்வில் கலந்துகொண்ட ஒட்டுமொத்த பேரில் 47% விழுக்காட்டினர் சென்ற ஓராண்டில் வேலை, கூடுதல் அழுத்தத்தைத் தந்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.
மூன்றில் ஒரு பங்கினர் தங்கள் மனநலம் மோசமடைந்ததாகவும் 25 விழுக்காட்டினர் உடல்நலம் மோசமடைந்ததாகவும் கூறினர்.

