சிங்கப்பூர்-மலேசியக் கடற்படைகளின் ஒரு வாரகால கூட்டுப் பயிற்சி
சிங்கப்பூர் மலேசியக் கடற்படைகள் மலாக்கா நீரிணையில் ஒரு வாரப் பயிற்சியை நடத்தியுள்ளன. இரு தரப்பு வீரர்களும் நேரில் சந்தித்துக்கொள்ளாத போதும், ஆகாயத் தற்காப்புப் பயிற்சிகள், துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சி போன்றவை அதில் நடத்தப்பட்டன.
'மலப்புரா பயிற்சி' எனும் அந்த இருநாட்டுக் கடற்படைப் பயிற்சியில் மொத்தம் 500 பேர் கலந்துகொண்டதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
மலாக்கா நீரிணையின் வடக்குப் பகுதியில் சிங்கப்பூர் குடியரசுக் கடற்படையின் ஆர்எஸ்எஸ் ஸ்டால்வார்ட் போர்க்கப்பல், ஆகாயப் படையின் எஸ் -70பி சீஹாக் கடற்படை ஹெலிகாப்டர் ஆகியவற்றுடன் இரண்டு விக்டரி-ரக ஏவுகணைக் கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்டன.
சாங்கி கடற்படைத் தளத்திலும் பேராக்கில் உள்ள லுமுட் கடற்படைத் தளத்திலும் ஒரே நேரத்தில் மெய்நிகர் வழியாக துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
தொண்டுழியர்களுக்குத்
தற்காப்பு அமைச்சு அங்கீகாரம்
தற்காப்பு அமைச்சு, அதன் 37 செயற்குழுக்களிலும் மன்றங்களிலும் சேவையாற்றும் 278 தொண்டூழியர்களுக்கு அங்கீகாரம் வழங்கவுள்ளது. தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் இவர்களுக்கு பாராட்டுக் கடிதங்களை இந்த வாரத்தில் அனுப்புவார் என்று அமைச்சு நேற்று தெரிவித்தது.
பாராட்டுக் கடிதம் பெறவிருப்பவர்களில் குளோபல் இந்தியன் அனைத்துலகப் பள்ளியின் முதல்வர் திருவாட்டி மெலிசா மரியாவும் ஒருவர் ஆவார்.
சிங்கப்பூரின் பாதுகாப்பில் தேசிய சேவை ஆற்றும் பங்கை உணர்ந்த அவர், தேசிய சேவையில் சேரவிருக்கும் தமது பள்ளி மாணவர்களுக்கு உரைகளையும் உடற்பயிற்சியையும் ஏற்பாடு செய்தார். கடந்த 2018ஆம் ஆண்டு அமைச்சின் தற்காப்பில் சமூக உறவு தொடர்பான ஆலோசனைக் குழுவில் அவர் இணைந்தார்.
வரலாற்றுப் பாடநூல்களில் இயற்கை பற்றிய அணுகுமுறை மாறவேண்டும்
சிங்கப்பூரில் வரலாற்றுப் பாடநூல்களில் நாட்டின் இயற்கைச் சூழல் பற்றிய அணுகுமுறை, நிலைத்தன்மை பற்றி மாணவர்களுக்கு முழுமையான புரிதல் ஏற்படும் வகையில் மாற்றப்பட வேண்டும் என்று இங்குள்ள இரண்டு ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பருவநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வு கூடியுள்ள வேளையில், இயற்கையின் அனுகூலங்கள் பற்றியும் இயற்கைப் பாதுகாப்பைவிட வளர்ச்சியை முன்னிறுத்துவதால் ஏற்படும் பாதிப்பு பற்றி மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறினர்.
யேல்-என்யுஎஸ் கல்லூரிப் பட்டதாரியான நியோ சியாவ்யுன், இணைப் பேராசிரியர் மேத்தியூ ஸ்னைடர்-மேயர்சன் இருவரும், 1984 - முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான உயர்நிலை ஒன்று, உயர்நிலை இரண்டு வரலாற்றுப் பாடநூல்களை ஆய்வு செய்தனர்.
சிங்கப்பூரில் உள்ள வரலாற்றுப் பாடல்நூல்களில் நாட்டின் வளர்ச்சி பற்றி பெரும்பாலும் கவனம் செலுத்துவதாகவும் அதற்காக அதன் இயற்கைச் சூழலில் நேர்ந்த இழப்புகள் பற்றி அவை பேசுவதில்லை என்றும் ஆய்வு கூறியது.

