கூட்டு மோசடியில் கிடைத்த பணத்தில் $10,000 தொகையைப் பதுக்கி வைப்பதற்காக வங்கிக் கணக்கைத் திறக்கும்படி நண்பரிடம் கேட்டுக்கொண்டார் ஒருவர். கணக்கைத் திறந்து அதில் பணம் நிரப்பிய நண்பர் அதைத் தாமே வைத்துக் கொள்ள முடிவு செய்தார்.
கூட்டு மோசடிக்கு உதவ, வங்கிக் கணக்கைத் திறக்க நண்பரிடம் சொன்ன கிஷன் பிள்ளை கணேசன் பிள்ளைக்கு நேற்று 21 மாதம் நன்னடத்தை உத்தரவு விதிக்கப்பட்டது.
நன்னடத்தை உத்தரவின் ஒரு பகுதி யாக, முழுநேர தேசிய சேவையாளரான கிஷன், 22, பகலில் வெளியில் செல்லக்கூடாது. அவர் 60 மணி நேரம் சமூகசேவையும் செய்ய வேண்டும். அவர் நன்னடத்தையை உறுதிசெய்ய $5,000 பிணை செலுத்தும்படி அவரது பெற்றோருக்கு உத்தரவிடப்பட்டது.
அடையாளம் குறிப்பிடப்படாத 77 வயது நபருக்கு, முன்னதாக மோசடிக்காரர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்ததாகவும் முதியவர் தமது வங்கிக் கணக்கு விவரம், ரகசிய மறை எண்கள் ஆகியவற்றை அவரிடம் தந்ததாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. பின்னர், தமது வங்கி அட்டையில் 15 திருட்டுப் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதை முதியவர் கண்டறிந்தார். மொத்தம் $35,350 பணம் பறிபோனது.
கிஷன், ரூபஸ் ராக்கேஷ், இமானுவேல் ஆகியோருடன் ரவிவரதன், 20, மகேந்திர சக்ரவர்த்தி சாம்ராஜ் அசோகன், 34 ஆகியோர் அந்தப் பரிவர்த்தனைகளைச் செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.
வங்கிக் கணக்குத் திறந்து, பின்னர் பணத்தைத் தாமே வைத்துக் கொள்ள முயன்ற ரூஃபஸ் ராக்கேஷ் குமார் கலைச்செல்வம், 19, மீது கடந்த வாரம் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அக்டோபர் 25 தேதி அவருக்கு தண்டனை விதிக்கப்படும்.
அரசாங்க அதிகாரியிடம் பொய்கூறிய இமானுவேலுக்கு ஒன்பது மாதம் நன்னடத்தை உத்தரவு விதிக்கப்பட்டது.
ரவிவரதன், மகேந்திர சக்ரவர்த்தி இருவர் மீதான வழக்குகள் பின்னொரு தேதியில் விசாரிக்கப்படும்.

