கொள்ளைநோயின் காரணமாக சில சிங்கப்பூரர்கள் திருமணம், குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த திட்டங்களைத் தள்ளிப் போட்டுள்ளனர். இதன் விளைவாகக் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட திருமணம், பிறப்புகளின் எண்ணிக்கை ஆகியவை குறைந்துள்ளன என அரசாங்கம் நேற்று வெளியிட்ட வருடாந்திர மக்கள் தொகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ல் குடிமக்களிடையே 19,430 திருமணங்கள் பதிவாயின. 2019ல் 22,165 எண்ணிக்கையைவிட இது 12.3% குறைவு. இது 2010ஆம் ஆண்டில் பதிவான 20,273 திருமணங்களுக்குப் பிறகு ஆகக் குறைவான எண்ணிக்கை.
கொள்ளைநோயால் ஒன்றுகூடல்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் பலர் திருமணங்களைத் தள்ளிப் போட்டிருக்கலாம் என அறிக்கையை வெளியிட்ட தேசிய மக்கள் தொகை, திறனாளர் பிரிவு தெரிவித்தது. எண்ணிக்கையின் ஆகப் பெரிய சரிவு 2020ன் முதல் பகுதில் நிகழ்ந்தது. ஏப்ரல் 7லிருந்து ஜூன் 1 வரை விதிக்கப்பட்ட முடக்கநிலையின்போது திருமணங்களை நேரடியாக நடத்த தடை விதிக்கப்பட்டது. மார்ச் மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை 2,200 திருமணங்களே பதிவாயின. இது 2019ன் அதே காலகட்டத்தில் 4,800 ஆக இருந்தது.
ஆயினும், கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டபோது, 2020ன் இறுதி மூன்று மாதங்களில் 7,700 திருமணங்கள் பதிவாயின. இது 2019ல் 6,900ஆக இருந்தது.
2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சென்ற ஆண்டு வெளிநாட்டவர்களுக்கும் சிங்கப்பூர் குடிமக்களுக்கும் இடையே பதிவான திருமணங்களின் எண்ணிக்கை 7% குறைந்தது. இது 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆகக் குறைவான விகிதம்.
இதற்கிடையே, குடிமக்களிடையே பதிவான பிறப்பு விகிதம் 3.1% குறைந்து 31,816ஆக பதிவானது. ஒப்புநோக்கையில் 2019ல் 32,844 பிறப்புகள் பதிவாயின.
அதே காலகட்டத்தில் 2019ல் சுமார் 8,700ஆக இருந்த எண்ணிக்கை சென்ற ஆண்டு 8,000ஆக குறைந்தது. கொள்ளைநோயால் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தம்பதியர் தள்ளிப்போட்டிருக்கலாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் மொத்த கருத்தரிப்பு விகிதம் 2019ன் 1.14ஐ விட குறைந்து சென்ற ஆண்டு 1.1ஆக உள்ளது. வெவ்வேறு இனத்தவரை ஒப்பிடுகையில் மலாய் இனத்தவர்களிடையே மட்டும்தான் இவ்விகிதம் சென்ற ஆண்டில் 1.8லிருந்து 1.82ஆக அதிகரித்துள்ளது. சீனர்களிடையே இது 0.99லிருந்து 0.94ஆகவும் இந்தியர்களிடையே 0.98லிருந்து 0.96 ஆகவும் குறைந்துள்ளது.
மக்கள் பொதுவாகத் தாமதமாகத் திருமணம் செய்துகொள்ளவும் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளவும் விரும்புவதே விகிதத்தின் குறைவுக்குக் காரணம் என்றது அறிக்கை.
கடந்த ஆண்டு முதல் திருமணம் செய்துகொள்ளும் சராசரி வயது மணமகன்களுக்கு 30.1ஆகவும் மணப்பெண்களுக்கு 28.4ஆகவும் இருந்தது. பெண்கள் முதல் குழந்தை பெற்றுக்கொள்ளும் சராசரி வயது 30.8ஆக இருந்தது. இவை 2019ன் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் ஏறத்தாழ ஒரே அளவில் அமைந்துள்ளன.
ஆயினும் இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் திருமணப் பதிவுகளின் எண்ணிக்கை நோய்த்தொற்றுக்கு முந்தைய அளவுக்குத் திரும்பியுள்ளது என சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

