சிங்கப்பூரில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கோல்டுபெல் நிறுவனத்தின் துணை நிறுவமான 'எக்ஸ்குவேர்', பிரபல அனைத்துலகத் தளவாட நிறுவனம் ஒன்றுக்கு பல தானியங்கப் பாரந்தூக்கிகளை (ஃபோர்க்லிஃப்ட்) வழங்குகிறது. விரைவில் ஊழியர்கள் இன்றி கிடங்குங்கள் இயங்க இது வழி வகுக்கும்.
ஈராண்டுகளுக்கு முன்பு, 'எக்ஸ்குவேர்', முதலில் ஒரே ஒரு பாரந்தூக்கியில் தானியக்கக் கருவியைப் பொருத்தி 'கட்டோன் நாசி' நிறுவனத்துக்கு வழங்கியது. அவ்வாண்டிறுதிக்குள் அந்நிறுவனம் ஓட்டுநரின்றி இயங்கும் ஐந்து பாரந்தூக்கிகளைப் பயன்படுத்தத் தொடங்கியது.
"ஓர் இயந்திரத்தின் விலை $130,000. அது எந்த அளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து, அது ஏழு முதல் எட்டு ஆண்டுகள் வரை உழைக்கும். அந்த இயந்திரம் கம்பிவடம் இல்லாமல் தானாக மின்னூட்டிக்கொள்ளும். 90 நிமிடங்கள் மின்னூட்டினால், அதை 12 மணி நேரத்துக்குப் பயன்படுத்தலாம்," என்றார் கோல்டுபெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆர்தர் சுவா.

