செய்திக்கொத்து

3 mins read
4eb82324-7960-4934-bc1b-67f5550d7de3
-

பிரதமராக மீண்டும் தேர்வு பெற்ற டுருடோவுக்கு பிரதமர் லீ வாழ்த்து

கனடாவின் பிரதமராக மீண்டும் தேர்வு பெற்றிருக்கும் திரு ஜஸ்டின் டுருடோவுக்கு (வலது) தமது வாழ்த்து களைத் தெரிவித்துக் கொண்டுள்ள பிரதமர் லீ சியன் லூங், திரு டுருடோவின் வெற்றி கனடிய மக்கள் அவரது தலைமைத்துவத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் வெளிக்காட்டுகிறது என்று நேற்று முன்தினம் தெரிவித்தார்.

திரு டுருடோ கடந்த வாரம் மூன்றாவது முறையாக தமது பிரதமர் பதவியைத் தக்க வைத்துக்கொண்டார். இந்தப் பெருந்தொற்று காலத்தில் அரசாங்கம் எடுக்கும் திட்டங்களுக்கு மக்களிடமிருந்து வலுவான ஆதரவைப் பெறும் பொருட்டு, திரு டுருடோ திடீர் தேர்தலை நடத்த உத்தரவிட்டார். தமது வெற்றி உரையில் திரு டுருடோ, கனடியர்களை இன்னும் பிரகாசமான எதிர்காலத்துக்கு இட்டுச்செல்ல உறுதியளித்தார்.

திரு டுருடோவுக்கு அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில் திரு லீ, "சிங்கப்பூரும் கனடாவும் அற்புதமான நல்லுறவைக் கொண்டிருக்கின்றன. அத்தியாவசிய உலகளாவிய இணைப்புகளுக்கும் பலதரப்பு தடுப்பூசித் திட்டத்துக்கு ஆதரவளிக்கவும் இரு நாடுகளும் கடப்பாடு கொண்டு உள்ளன," என்று குறிப்பிட்டிருந்தார்.

பிள்ளைகள், மூத்தோருக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள் தற்காலிக ரத்து

பிள்ளைகள், மூத்தோருக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூர் அமைப்பு நேற்று தெரிவித்தது.

12 வயது மற்றும் அதற்கு கீழ்ப்பட்டோருக்கான நிகழ்ச்சிகள் அக்டோபர் 10ஆம் தேதி வரையும் 60 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டோருக்கான நிகழ்ச்சிகள் அக்டோபர் 24ஆம் தேதி வரையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று கூறிய ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூர், இரு பயன்பாட்டுத் திட்டங்களின் கீழ் உள்ள விளையாட்டு வசதிகள் தொடர்ந்து திறந்து இருக்கும் என்றும் அவற்றில் குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்றும் விவரித்தது.

இத்திட்டத்தின் கீழ் இயங்கும் உள்ளரங்கு வசதிகளில் பயிற்றுவிப்பாளர் உட்பட ஒரு பங்கேற்பாளர் மட்டுமே ஒரு குழுவாக இயங்க முடியும்.

அவர்கள் ஒரு மீட்டர் இடைவெளியுடன் செயல்பட வேண்டும். அந்தக் குழுக்களுக்கிடையிலான இடைவெளி மூன்று மீட்டராக இருக்க வேண்டும். பங்கேற்பாளர்களும் பயிற்றுவிப்பாளர்களும் முழுமையா கத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

தொற்றின்போது உதவிய பணிப்பெண்கள், முதலாளிகளுக்கு புதிய விருது

சிங்கப்பூரில் கொவிட்-19 பெருந்தொற்று சூழ்நிலையில் கடந்த 18 மாதங்களாக பலர் வீட்டிலிருந்து வேலை செய்யும் நிர்பந்தத்துக்கு ஆளானதால், முதலாளிகளுக்கும் பணிப் பெண்களுக்கு அது பெரும் சவாலாக இருந்தது. அப்படிப் பட்ட நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு நல்கி செயலாற்றிய முதலாளிகளையும் பணிப்பெண்களையும் அங்கீகரிக்கும் வகையில் ஒரு புதிய விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

'தலைசிறந்த வெளிநாட்டு இல்லப் பணிப்பெண், தலை சிறந்த முதலாளி ஆகிய விருதுகளுக்கு 'ஃபாஸ்ட்' எனப் படும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண் சமூக ஆதரவு, பயிற்சி சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த விருது களுக்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் இம்மாதம் 30ஆம் தேதி. இந்த விருதுகளுக்கான பரிந்துரைகள் கடந்த ஜூலை 17ஆம் தேதி தொடங்கின.

வெற்றி பெற்றவர்கள் பற்றிய விவரங்கள் 'ஃபாஸ்ட்' அமைப்பின் நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண், முதலாளி 2021 நாளன்று அறிவிக்கப் படும்.