மிகவும் மோசமான, சரிசெய்யமுடியாத அளவில் பருவநிலை மாற்றம் நாடுகளையும் பொருளியல் களையும் பாதிக்கக்கூடும். அத்தகைய விளைவுகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுப்பது நிறுவனங்களின் பொறுப்பு என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.
பருவநிலை மாற்றம், வர்த்தக வாய்ப்பை வழங்குவதாகவும் சிங்கப்பூரின் தெமாசெக் நிறுவனம் நடத்திய 'ஈக்கோஸ்பெரிட்டி' எனப்படும் நீடித்த நிலைத்தன்மை மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார். மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பாளர்கள் மெய்நிகர் வாயிலாகவும் நிகழ்ச்சிக்கு நேரில் சென்றும் கலந்துகொள்வர். மாநாடு மரினா பே சேண்ட்ஸில் நடைபெறுகிறது.
நீடித்த நிலைத்தன்மை, பொருளியல் வளர்ச்சி ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதற்கு சிங்கப்பூர் ஓர் உதாரணம் எனத் திருவாட்டி ஹலிமா சுட்டினார். பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் பல்வேறு பகுதிகளைப் பாதிக்கின்றன. இருந்தாலும் தென்கிழக்காசியாவின் பரப்பளவைக் கருத்தில்கொள்ளும்போது அது எதிர்கொள்ளும் பருவநிலை மாற்றம் தொடர்பிலான அபாயம் பெரிது என்று அவர் சொன்னார்.
நீளமான கடற்கரைப் பகுதிகளையும் அதிக மக்கள்தொகை உள்ள தாழ்வான பகுதிகளையும் கொண்டிருப்பதால் கடல் நீர் மட்டம் உயரும்போது ஆசியான் நாடுகள் பாதிக்கப்படலாம் என்று அதிபர் கூறினார். பருவநிலை மாற்றத்தால் உலகின் வெப்பநிலை அதிகரிக்கும்போது பனிக் கட்டிகள் உருகும், அதனால் கடல் நீர் மட்டம் உயரும்.
உதாரணத்திற்கு, இந்த வட்டாரத்தில் கடல் நீர் மட்டம் ஒரு மீட்டர் உயர்ந்தால், அடிக்கடி வெள்ளம் ஏற்படக்கூடிய கடற்கரைப் பகுதிகளில் வாழும் குறைந்தது 89 மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் என்பதைத் திருவாட்டி ஹலிமா சுட்டினார்.
சூறாவளி போன்ற பல பருவநிலை நிகழ்வுகள் கூடுதல் வீரியத்துடன் அடிக்கடி தாக்குவதை எடுத்துச் சொன்ன அவர், அவற்றால் அதிக அளவில் மனித, பொருளியல் இழப்பு ஏற்படுவதாகக் கூறினார்.

