இவரைத் தெரியுமா?
மரணமடைந்த 72 வயது திரு டி வசந்தராசன் த/பெ துரைநாயகத்தின் (படம்) நெருங்கிய உறவினர்களை முன்வருமாறு போலிசார் கேட்டுக்கொள்கின்றனர். கிளமெண்டி அவென்யூ நான்கில் உள்ள வீவக புளோக் 305ல் வசித்து வந்த திரு வசந்தராசன், இம்மாதம் ஒன்பதாம் தேதியன்று உயிரிழந்தார்.
இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற எண்ணை அழைத்து போலிசாருக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். www.police.gov.sg/witness என்ற இணையத்தளத்திலும் தகவல்களைச் சமர்ப்பிக்கலாம். தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்.
சைனாடவுன் திருட்டு: இரண்டாவது ஆடவர் மீது குற்றச்சாட்டு
சைனாடவுனில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் நிகழ்ந்த திருட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டாவது ஆடவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சைனாடவுன் பகுதியில் இருக்கும் டெம்பிள் ஸ்திரீட்டில் உள்ள 'எஸ் இன்' தங்கும் விடுதியில் திருட 41 வயது இங் செக் கியாங் தூண்டியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் மூன்று மணிக்கு நேர்ந்தது.
கத்தி ஏந்தியபடி அவர் நால்வரிடமிருந்து 1,000 வெள்ளியைத் திருடியதாகச் சொல்லப்படுகிறது. கடந்த சனிக்கிழமையன்று அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. திருட்டுக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக 14 ஆண்டுச் சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.
கணினி விளையாட்டுக்
கணக்கு மோசடி
தங்களின் கணினி விளையாட்டுக் கணக்குகளை இணையத்தில் விற்போரை மோசடிக்காரர்கள் குறிவைக்கின்றனர். பிறரின் கணினி விளையாட்டுக் கணக்குகளை வாங்க மோசடிக்காரர்கள் விருப்பம் தெரிவிப்பர். கட்டணம் செலுத்த அவர்களைப் போலி இணையத்தளங்களுக்குப் போகச் சொல்லி அங்கு 'இ-வாலட்' எனப்படும் போலி மின் பணப்பைகளை உருவாக்க வைப்பர்.
இவ்வாறு இந்த மோசடிச் செயல்கள் இடம்பெறுவதாக போலிசார் எச்சரிக்கின்றனர். மின் பணப்பை சேவைகளை வழங்குவதாகச் சொல்லும் இணையத்தளங்களின் தொடர்பில் கவனமாக இருக்குமாறு போலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.
கையூட்டாக பாலியல் சேவை: சந்தேகத்திற்குரிய பெண் மரணம்
குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிக்கு பாலியல் சேவையைக் கையூட்டாக வழங்கியதாகச் சந்தேகிக்கப்பட்ட பெண் சென்ற மாதம் 27ஆம் தேதியன்று மாண்டார். அதனைத் தொடர்ந்து 32 வயது செங் வென்ஜுவென் என்ற அவர் மீது இருந்த நீதிமன்ற விசாரணை முடிவுக்கு வந்தது.
சீனாவைச் சேர்ந்த செங் மீது 18 லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளும் இரண்டு மாதர் சாசனக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டிருந்தன. அவரின் மரணம் குறித்து அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம் விவரங்களை வெளியிடவில்லை. எனினும், சென்ற மாதம் வீடமைப்புக் கட்டடம் ஒன்றின்கீழ் செங் நினைவிழந்த நிலையில் காணப்பட்டதாக சீன நாளிழான சாவ்பாவ் தெரிவித்திருந்தது. சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
பணிப்பெண் துன்புறுத்தல்:
குற்றவாளிக்கு ஏழு வாரச் சிறை
'ஹேங்கர்' எனும் ஆடைகளை மாட்டும் கம்பிகள் உடையும் வரை அவற்றைக் கொண்டு பணிப்பெண்ணை அடித்த மாதிற்கு ஏழு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கட்டாய சிகிச்சை ஆணையைப் பிறப்பிக்க பரிந்துரைக்கப்பட்டபோதும் 35 வயது வாங் சியாவ்ஹுய்க்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இசை ஆசிரியரான அவர், மோசமான மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தனது செயல்களைக் கட்டுப்படுத்த சிரமப்பட்டு வருவதாகவும் மனநலக் கழகத்தின் அறிக்கை குறிப்பிட்டது.
பாதிக்கப்பட்ட 25 வயது பணிப்பெண்ணான குமாரி ஙோ சபாலுக்கு 2,000 வெள்ளி தருமாறும் உத்தரவிடப்பட்டது. தாக்கியதாகச் சுமத்தப்பட்டிருந்த ஒரு குற்றச்சாட்டை வாங் ஒப்புக்கொண்டார். தீர்ப்பளிக்கும்போது மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்பட்டன.

