கடந்த பிப்ரவரி மாதம் துவாஸில் உள்ள தொழில்துறை கட்டடத்தில் தீ விபத்து நிகழ்ந்தபோது ஆலையில் இருந்த எட்டு ஊழியர்கள் துயரத்தில் அலறியபடி அருகிலிருந்த திடலுக்கு ஓடியிருக்கின்றனர். அருகில் மற்ற பிரிவுகளில் வேலை செய்துகொண்டிருந்த ஊழியர்கள், மோசமான தீக்காயங்களால் தவித்த ஊழியர்களின் மேல் தண்ணீரைப் பீய்ச்சி அவர்களைக் காப்பாற்ற முயன்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று 32இ துவாஸ் அவென்யூ 11ல் நிகழ்ந்த இந்தத் துயரமான அனுபவங்களை காயமடைந்த ஊழியர்களில் ஒருவரான 32 வயது திரு ஹொசேன் ஜித்து விசாரணைக் குழுவின் முன்னிலையில் பகிர்ந்துகொண்டார்.
நீதிமன்றத்தில் திரு ஜித்து முகக்கவசம் அணிந்திருந்தபோதும் அவரின் முகத்தில் இருந்த தீக்காயங்களின் தழும்புகள் வெளியே தெரிந்தன, அவரின் உடலில் 54 விழுக்காட்டுப் பகுதிகளில் தீக்காயங்கள் ஏற்பட்டன. மூச்சு விடுவதற்கும் கண்களை மூடுவதற்கும் அவர் சிரமப்பட்டார்.
"எனது கண்களுக்குக் கீழ் உள்ள தோல் பகுதி எரிந்து போனது, விபத்துக்குப் பிறகு என்னால் கண்களை மூடவும் தூங்கவும் முடியவில்லை," என்று அவர் சொன்னார். சம்பவத்தில் மோசமான தீக்காயங்களுக்கு ஆளான 38 வயது திரு சுப்பையன் மாரிமுத்து, 29 வயது திரு அனிசுஸ்ஸாமான் முகமது, 23 வயது திரு ஷோஹெல் முகமது ஆகியோர் மாண்டனர். சம்பவம் நிகழ்ந்தபோது ஆலையில் இல்லாத இருவர் உட்பட ஏழு பேர் காயமுற்றனர்.
ஆலையில் இயந்திரக் கோளாற்றால் விபத்து நேர்ந்ததாகக் கருதப்படுகிறது என்று முன்னதாக விசாரணையின்போது தெரியவந்தது.
ஆலையில் வேலை செய்துகொண்டிருந்த ஊழியர்கள் 'ஸ்டார்ஸ் எஞ்சினியரிங்' நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.
எண்ணெய்யைச் சுடவைத்தபோது அதன் தொடர்பில் இயந்திரத்தின் வெப்பநிலை சரியாகக் கண்காணிக்கப்படவில்லை என்று நிறுவனத்தின் ஒரே இயக்குநரான திரு சுவா சிங் டா தெரிவித்தார். இயந்திரத்தை சுமார் ஒரு மணிநேரத்திற்குப் பயன்படுத்திய பிறகு அதிலிருந்து சத்தம் வருவதைக் கேட்டதாகத் திரு ஜித்து கூறினார். இயந்திரத்தை அணைத்த பிறகும் சத்தம் கேட்டதாக அவர் சொன்னார்.
சம்பவம் நிகழ்ந்தபோது மயக்கமடைந்த திரு ஜித்து சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.