தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற மனைவியை சமாதானத்துக்குப் பலமுறை அழைத்தும் வராததால் அவரைக் கடத்திச்சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவதாக கணவர் மிரட்டினார். தன் உயிரையும் மாய்த்துக்கொள்ளப் போவதாக அவர் அச்சுறுத்தினார்.
தற்போது 40 வயதாகும் முருகன் நண்டோவுக்கு ஈராண்டு, இரண்டு மாதம், ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2019 ஜூலை 2ஆம் தேதி இரவு 11 மணியளவில் துவாஸ் சோதனைச் சாவடியைக் கடந்து செல்ல முயன்றபோது போலிசார் அவரைக் கைது செய்தனர். கடத்தப்பட்ட அவரது மனைவியான 40 வயது கிருஷ்ணவேணி சுப்ரமணியத்தையும் போலிசார் மீட்டனர்.
மலேசிய தம்பதியரான அவர்கள், அந்தச் சமயத்தில் ஜோகூர் பாருவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
திருமதி கிருஷ்ணவேணியின் உறவினர் ஒருவர் முன்கூட்டியே முருகனின் திட்டத்தை போலிசுக்குத் தெரிவித்திருந்தார்.
காணொளிக் காட்சிமூலம் சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 29) முன்னிலைப்படுத்தப்பட்ட முருகன் தன்மீது சுமத்தப்பட்ட கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைக் கடந்த வாரம் ஒப்புக்கொண்டிருந்தார்.
2007ல் திருமணம் புரிந்த அவர்கள் ஜோகூர் பாருவில் வசித்து வந்தனர். ஆனால் திருமண வாழ்க்கை கசந்தது.
முருகன் தனது மனைவியை அடித்துத் துன்புறுத்தினார் என்று போலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.
தொடர்புடைய செய்திகள்
சூதாட்டப் பழக்கத்தால் அவர் கடனாளி ஆனார்.
கடந்த 2019ல் தமது பிரச்சினைகள் பற்றியும் தாம் தனிமையில் இருந்ததைப் பற்றியும் தோழியிடம் கூறியிருந்தார் திருமதி கிருஷ்ணவேணி.
அவர்மூலம் புதிய நண்பர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் தொலைபேசி வழியாக மட்டும் பேசி வந்தனர்.
மனைவியின் தொலைபேசியில் குறுஞ்செய்திகளைக் கண்ட முருகன், அவரிடம் இதுபற்றிக் கேள்வி எழுப்ப, தாம் அத்தகைய கள்ளத் தொடர்பு வைத்திருக்கவில்லை என்றார் திருமதி கிருஷ்ணவேணி.
ஜோகூர் பாருவில் உள்ள தமது தாயாரின் வீட்டுக்கு மாறியதுடன், மணமுறிவு செய்துகொள்ள திருமதி கிருஷ்ணவேணி விண்ணப்பம் செய்தார்.


