வீட்டைச் சட்டவிரோதமாக வாடகைக்கு விட்டவருக்குச் சிறை

வீட்டைச் சட்டவிரோதமாக வாடகைக்கு விட்டவருக்குச் சிறை

2 mins read
2fe953e8-3941-4ec3-b97a-a2269f7088c7
தமன்தீப்பை (இடது) பிரச்சினையிலிருந்து தப்பிவைக்க கலையரசன் உதவினார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தாம் வாடகைக்கு குடியிருந்த வீடு ஒன்றைப் பலருக்குச் சட்டவிரோதமாக வாடகைக்குவிட்ட ஆடவர் ஒருவர், வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனைகளில் குறைந்தது இருமுறையாவது மாட்டிக்கொள்ளாமல் தப்பினார்.

அந்தத் திடீர் சோதனைகள் நடத்தப்படவிருப்பது குறித்து தம் நண்பராக இருந்த வீவக அமலாக்க அதிகாரி ஒருவரிடமிருந்து முன்கூட்டியே தகவல் கிடைத்ததே அதற்குக் காரணம்.

ஆனால், இந்தக் குற்றம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, தமன்தீப் சிங் எனும் அந்த 23 வயது இந்திய நாட்டவர், தாம் குடியிருந்த வீட்டிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது.

அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின்கீழ், இரு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, புதன்கிழமை (செப்டம்பர் 29) அவருக்கு 25 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2017ல் வீவக அமலாக்க அதிகாரி கலையரசன் கருப்பையாவை தமன்தீப் சந்தித்தார். தமன்தீப் குடியிருந்த வீட்டை கருப்பையா, 55, அப்போது சோதனை செய்தார்.

பின்னர் இருவரும் நண்பர்களாயினர். அவ்வப்போது தொலைபேசியில் உரையாடினர்.

தமன்தீப் பிறகு வேறொரு வாடகை வீட்டிற்குக் குடிபெயர்ந்தார். அந்த வீட்டை அவர் சட்டவிரோதமாக மற்றவர்களுக்கு வாடகைக்குவிட்டார்.

அந்த வீட்டில் ஒரே நேரத்தில் 12 அல்லது 13 பேர் வரை வசித்தனர். ஒவ்வொருவரிடமிருந்தும் மாதத்திற்கு ஏறக்குறைய $200 வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த வீட்டில் அதிக கூட்டம் இருப்பது மற்றும் இரைச்சல் ஏற்படுவது குறித்து வீவகவுக்கு புகார்கள் கிடைத்தன.

நட்பின் காரணமாக, தமன்தீப்பை பிரச்சினையிலிருந்து தப்பிவைக்க கலையரசன் உதவினார். 2019 மே 8, செப்டம்பர் 10 ஆகிய தேதிகளில் தமன்தீப் குடியிருந்த வீட்டில் வீவக திடீர் சோதனை நடத்த திட்டமிட்டிருப்பது பற்றி தமன்தீப்பிற்கு கலையரசன் தெரியப்படுத்தினார்.

எனினும், போலிசிடமிருந்து தங்களுக்குத் தகவல் கிடைத்திருப்பது குறித்து அந்த வீட்டின் உரிமையாளரிடம் வீவக அமலாக்க அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து, தமன்தீப்பும் அந்த வீட்டில் குடியிருந்த மற்றவர்களும் வீட்டைக் காலி செய்ய நேரிட்டது.

தமன்தீப்பிற்கு கலையரசன் உதவி வந்தது குறித்து கடந்த ஆண்டு ஜனவரியில் லஞ்ச, ஊழல் புலனாய்வுத் துறைக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அவ்விருவரின் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

கலையரசனுக்கு கடந்த மாதம் 25 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்