மூன்று ஆண்டுகளாக போலி விலைப்புள்ளிகளைச் சமர்ப்பித்ததன் மூலம் உள்துறை அமைச்சின்கீழ் பல்வேறு துறைகளை தம்பதியர் இருவர் ஏமாற்றியிருந்தனர்.
சியூ பூன் பெங், 43, என்பவரும் குவான் பூய் யீ, 37, எனும் அவரது மனைவியும் 'பில்ட்ஃபார்ம்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன்' நிறுவனத்தின் பொது மேலாளராகவும் இயக்குநராகவும் சதித்திட்டம் தீட்டினர். 2012 முதல் 2014 வரை உள்துறை அமைச்சின் பல்வேறு துறைகளிடமிருந்து $165,000 மதிப்புள்ள வேலை ஒப்பந்தங்களை அத்தம்பதி பெற்றுக்கொண்டனர்.
சதித்திட்டம் தீட்டியதாக இருவர்மீதான குற்றமும் புதன்கிழமை (செப்டம்பர் 29) நிரூபணமானது.
சியூமீது 10 மோசடிக் குற்றச்சாட்டுகளும் குவான்மீது மூன்று குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டன.
2011 டிசம்பரில், உள்துறை அமைச்சின் மேற்கு மண்டலத்தில் அதன் அனைத்து கட்டடப் பணிகளுக்கும் ஒரே துணை ஒப்பந்ததாரராக பில்ட்ஃபார்ம்ஸ் நிறுவனம் இருந்தது.
அந்த மேற்கு மண்டலத்தில் உள்ள உள்துறை அமைச்சின் துறைகளில் சிங்கப்பூர் போலிஸ் படை, உள்துறைக் குழுப் பயிற்சிக் கழகம், குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை உள்ளிட்டவை அடங்கின.
இந்த ஏற்பாட்டின் ஒரு பகுதியாக, குறிப்பிட்ட சில பணிகளுக்காக மூன்று விலைப்புள்ளிகளை பில்ட்ஃபார்ம்ஸ் நிறுவனம் அளிக்க வேண்டும்.
உள்துறை அமைச்சின் தகுதிக்கூறுகளைப் பூர்த்திசெய்யும் ஆகக் குறைந்த விலையிலான விலைப்புள்ளிக்கு அந்தப் பணிகள் வழங்கப்படும்.
'பில்ட்ஃபார்ம்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன்' மூலம் மற்ற துணை ஒப்பந்ததாரர்களிடமிருந்து உண்மையான விலைப்புள்ளிகளைப் பெற சியூவும் குவானும் முற்பட்டனர். ஆனால், அந்த ஒப்பந்ததாரர்கள் அவர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவில்லை.
2012 ஜனவரியில், பில்ட்ஃபார்ம்ஸ் நிறுவனத்துடன் சேர்த்து மற்ற நிறுவனங்களிடமிருந்தும் போலி விலைப்புள்ளிகளைத் தயார்செய்வதற்கான யோசனையை சியூ முன்வைத்தார்.
'பில்ட்ஃபார்ம்ஸ்' நிறுவனத்தின் விலைப்புள்ளியே ஆகக் குறைந்த விலையில் அமைய வேண்டும் என்பதே அவரது திட்டம். அப்போதுதான், வேலை ஒப்பந்தங்கள் அவரது நிறுவனத்திற்கு வழங்கப்படும்.
மற்ற நிறுவனங்களிடமிருந்து போலி விலைப்புள்ளிகளை எப்படித் தயாரிப்பது என்பது பற்றி மனைவி குவானுக்கு சியூ சொல்லித் தந்தார். அதன்படி, 'பில்ட்ஃபார்ம்ஸ்' நிறுவனத்தின் நிர்வாகப் பணியாளர்களில் சிலருக்கு அதை குவான் சொல்லித் தந்தார்.
மூன்று வேறு நிறுவனங்களின் பெயரில் போலி விலைப்புள்ளிகள் தயாரிக்கப்பட்டன. போலி ஆவணங்களைத் தயாரிக்க, 'பில்ட்ஃபார்ம்ஸ்' நிறுவனத்தின் நிர்வாகப் பணியாளர்கள் அந்த மூன்று நிறுவனங்களின் பெயர்களைத் தயார் செய்தனர்.
சியூ, குவானின் சதித்திட்டம் எப்படி வெளிச்சத்திற்கு வந்தது என்பது பற்றி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை.
இந்த வழக்கு அக்டோபர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

