செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
75abd93e-2f1c-4268-83d3-8f0ffbb00e4c
-

வெளிநாட்டுத் தலையீடு சட்டம் தொடர்பில் பாட்டாளிக் கட்சி

சிங்கப்பூரில் வெளிநாட்டுத் தலையீட்டை எதிர் கொள்வதற்காக வரையப்பட்ட நகல் சட்டத்தில், சில மாற்றங்களைச் செய்யுமாறு பாட்டாளிக் கட்சி பரிந்துரை செய்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடுகளை அனுமதிப்பது, ஆணைபெற்ற அமைப்புகளின் தலைமை நிர்வாகிகளை 'அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நபர்கள்' என்று அடையாளம் காண்பது போன்ற திருத்தங்களைச் செய்யுமாறு கட்சி குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இம்மாதம் 13ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்ட 'ஃபிக்கா' எனப்படும் வெளிநாட்டுத் தலையீட்டுக்கு எதிரான நகல் சட்டம் தொடர்பில் பல்வேறு தொழில்நுட்ப, பாதுகாப்பு, சட்டத்துறை நிபுணர்கள் முன்வைத்த பரிந்துரைகளை பாட்டாளிக் கட்சியும் எதிரொலிப்பதாக உள்ளது.

500 மில்லியன் வெள்ளியை முதலீடு செய்யவுள்ளது 'யுஓபி'

சிங்கப்பூரிலும் ஆசியானிலும் தன் மின்னிலக்கச் சேவைகளை விரிவுபடுத்துவதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் $500 மில்லியனை 'யுஓபி' முதலீடு செய்யவுள்ளது. அத்துடன் மின்னிலக்கம் வாயிலாக தனது வர்த்தக வாடிக்கையாளர்களை இருமடங்காக்கி, ஏழு மில்லியனுக்கும் மேலானோரை ஈர்ப்பதையும் அது இலக்காகக் கொண்டுள்ளது. மின்னிலக்க வங்கிப் பரிவர்த்தனை செய்வது, தற்போது பரவலாகிவிட்ட நிலையில் அதை இளைய தலைமுறையினர் மட்டும் விரும்புவதில்லை என்றார் வங்கியின் மின்னிலக்கப் பரிவர்த்தனைக் குழுமத் தலைவர் திரு கெவின் லாம்.

அலுவலக இட வாடகைகள் 2019க்குப் பிறகு உயர்ந்துள்ளன

சிங்கப்பூரில் அலுவலக இடத்துக்கான வாடகைகள், மூன்றாம் காலாண்டில் வளர்ச்சி கண்டுள்ளதாக சொத்துச் சந்தை ஆலோசனை நிறுவனமான 'நைட் ஃபிராங்க்' நிறுவனம் தெரிவித்துள்ளது. 2019ன் நான்காம் காலாண்டுக்குப் பிறகு இவ்வாண்டு மூன்றாவது காலாண்டில் ராஃபிள்ஸ் பிளேஸ்/மரினா பே வட்டார அலுவலக வாடகைகள் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இணைந்து வேலை செய்யும் நிறுவனங்கள், வாடகை வளர்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.