தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற மனைவியை சமாதானத்துக்குப் பலமுறை அழைத்தும் வராததால் அவரைக் கடத்திச்சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவதாக கணவர் மிரட்டினார். தன் உயிரையும் மாய்த்துக்கொள்ளப் போவதாக அவர் அச்சுறுத்தினார்.
தற்போது 40 வயதாகும் முருகன் நண்டோவுக்கு ஈராண்டு, இரண்டு மாதம், ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2019 ஜூலை 2ஆம் தேதி இரவு 11 மணியளவில் துவாஸ் சோதனைச் சாவடியைக் கடந்து செல்ல முயன்றபோது போலிசார் அவரைக் கைதுசெய்தனர். கடத்தப்பட்ட அவரது மனைவியான 40 வயது கிருஷ்ணவேணி சுப்பிரமணியத்தையும் போலிசார் மீட்டனர்.
மலேசியத் தம்பதியரான அவர்கள், அந்தச் சமயத்தில் ஜோகூர் பாருவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.
திருமதி கிருஷ்ணவேணியின் உறவினர் ஒருவர் முன்கூட்டியே கணவரின் திட்டத்தை போலிசுக்குத் தெரிவித்திருந்தார்.
காணொளிக் காட்சிமூலம் சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட முருகன் கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைக் ஒப்புக்கொண்டார்.
2007ல் திருமணம் புரிந்த அவர்கள் ஜோகூர் பாருவில் வசித்து வந்தனர். ஆனால் திருமண வாழ்வு கசந்தது. முருகன், மனைவியை அடித்துத் துன்புறுத்தினார் என்றும் சூதாட்டப் பழக்கத்தால் கடனாளி ஆனார் என்றும் கூறப்பட்டது.
பிறகு மனைவி வேறு ஆடவருடன் கள்ளத்தனமாகப் பழகிக் கொண்டிருந்தார் என்று முருகன் சந்தேகப்பட்டார். ஆனால் அதை மறுத்த கிருஷ்ணவேணி, கணவரிடமிருந்து பிரிந்து மணமுறிவுக்கு விண்ணப்பித்தார்.

