தாம் வாடகைக்கு குடியிருந்த வீட்டைப் பலருக்கு சட்டவிரோதமாக உள்வாடகைக்குவிட்ட ஆடவர் ஒருவர், வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனைகளில் குறைந்தது இருமுறையாவது மாட்டிக்கொள்ளாமல் தப்பினார்.
அச்சோதனைகள் குறித்து தம் நண்பராக இருந்த வீவக அமலாக்க அதிகாரி ஒருவர் அவருக்கு முன்கூட்டியே தகவல் அளித்ததே அதற்குக் காரணம்.
ஆனால், இந்தக் குற்றம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, இந்தியாவைச் சேர்ந்த தமன்தீப் சிங், 23, தாம் குடியிருந்த வீட்டிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது.
அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின்கீழ், இரு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, நேற்று அவருக்கு 25 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2017ல் வீவக அமலாக்க அதிகாரியாக இருந்த கலையரசன் கருப்பையா, 55, அப்போது தமன்தீப் குடியிருந்த வீட்டை சோதனை செய்தபோது சந்தித்தனர். இருவரும் நண்பர்களாகி அவ்வப்போது தொலைபேசியில் உரையாடினர்.
பிறகு வேறொரு வாடகை வீட்டிற்குக் குடிபெயர்ந்த தமன்தீப், அதனைச் சட்டவிரோதமாக மற்றவர்களுக்கு வாடகைக்கு விட்டார்.
ஒரே நேரத்தில் அங்கு 12 அல்லது 13 பேர்வரை வசித்தனர். ஆளுக்கு மாதவாடகையாக ஏறக்குறைய $200 வசூலிக்கப்பட்டது.
அந்த வீட்டில் இருந்த அதிகக் கூட்டம், இரைச்சல் ஆகியவை குறித்து வீவகவுக்கு புகார் கிடைத்தது. நட்பின் காரணமாக, தமன்தீப்பை பிரச்சினையிலிருந்து தப்பவைக்க கலையரசன் உதவினார்.
தமன்திப்பிற்கு கலையரசன் உதவி வந்தது குறித்து கடந்த ஆண்டு ஜனவரியில் லஞ்ச, ஊழல் புலனாய்வுத் துறைக்குத் தகவல் கிடைத்தது. கலையரசனுக்கு கடந்த மாதம் 25 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.