துவாஸ் வெடிப்புச் சம்பவம் பற்றி நடைபெறும் பொதுவிசாரணையில், வெடிப்பின் வேகத்தால் தாம் இரண்டு மீட்டர் தூரத்துக்குத் தூக்கி எறியப்பட்டதாக நேற்று ஊழியர் ஒருவர் சாட்சியம் அளித்தார். அந்த வேதனைமிகு சம்பவத்தால் தாம் இன்னமும் கெட்ட கனவு களைக் காண்பதாக ரஹாட் அஸ்ஃபாக்குஸ்மான், 30, கூறினார்.
பொது விசாரணையில் சாட்சியம் அளித்திருக்கும் காயமடைந்த நான்காவது ஊழியர் அவர் ஆவார்.
வெடிப்புக்குப் பின்னர் எழுந்து நின்ற அவர், தம் மீது தீ பற்றியிருந்ததையும் தமது சட்டை எரிந்து போய்விட்டதையும் உணர்ந்து, சட்டையை உடனடியாகப் பிய்த்து எரிந்ததாகக் கூறினார்.
தம் உடல் கருகிப்போனதைப் பார்த்ததாகவும் வாயிலிருந்து ரத்தம் வெளிவந்ததையும் உணர்ந்ததாகவும் ரஹாட் விவரித்தார். நேற்று அவர் முகத்தில் வடுக்கள் காணப்பட்டன.
"நான் அழும்போது கண்ணீர் வரவில்லை. பகல்வெளிச்சத்தில் வெளியில் எதுவும் தெளிவாகத் தெரிவதில்லை," என்றார் ரஹாட்.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி துவாசில் உள்ள தொழிற்சாலையில் நடந்த வெடிப்பில் மூன்று வெளி நாட்டு ஊழியர்கள் மாண்டனர்.

