நாளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 1) முதல் டிசம்பர் 31 வரை மின்சாரக் கட்டணம் உயரவிருக்கிறது. இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து மின்சாரக் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டுடன் ஒப்புநோக்க, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் மின்சாரக் கட்டணம் சராசரியாக 3.2 விழுக்காடு உயரும். எஸ்பி குழுமம் வியாழக்கிழமை (செப்டம்பர் 30) இதனைத் தெரிவித்தது.
மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் விலை அதிகரிப்பே மின்சார விலை உயர்வதற்கான காரணம் என விளக்கமளிக்கப்பட்டது.
ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு மின்சாரக் கட்டணம் 23.38 காசிலிருந்து 24.11 காசாக உயரும் (பொருள், சேவை வரிக்கு முன்பாக).
கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுக்குப் பிறகு, மின்சாரக் கட்டணம் இந்த அளவு உயரவிருப்பது இதுவே முதன்முறை.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக நான்கறை வீடுகளில் வசிப்போருக்கான சராசரி மின்சாரக் கட்டணம் மாதத்திற்கு $2.49 அதிகரிக்கும் என்று எஸ்பி குழுமம் கூறியது.
எரிசக்தி சந்தை ஆணையம் நிர்ணயித்துள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில், காலாண்டுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணங்களை எஸ்பி குழுமம் மறுஆய்வு செய்து வருகிறது.