செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
0c4189aa-c3af-4b7c-af69-a0c0e47c17a4
-

ஓய்வுபெறும் ஹோ சிங் தெமாசெக் டிரஸ்ட் இயக்குநர் சபையில் சேர்கிறார்

தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பொறுப்பிலிருந்து விலகும் 68 வயது திருவாட்டி ஹோ சிங் (படம்) அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து தெமாசெக் டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்கிறார்.

திருவாட்டி ஹோ சிங் இன்று முதல் அந்தப் புதிய நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்படுகிறார். இன்றுதான் அவர் தெமாசெக் ஹோல்டிங்ஸ் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுகிறார். தெமாசெக் டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவராக தற்போது பதவி வகிக்கும் திரு எஸ். தனபாலனுக்குப் பதிலாக திருவாட்டி ஹோ சிங் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அந்தப் பதவியை ஏற்பார். திரு தனபாலன் தொடர்ந்து இயக்குநர் சபையில் தொடர்ந்து நீடிப்பதுடன் ஓய்வுபெற்ற கௌரவ தலைவராகப் பொறுப்பு ஏற்பார்.

தெமாசெக் டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவராக 2015 செப்டம்பர் முதல் பதவி வகிக்கும் திரு தனபாலன், "நல சமூக திட்டங்களில் ஹோ சிங்குக்கு ஆழ்ந்த ஈடுபாடு உள்ளது. பல திட்டங்களில் அவர் மிகுந்த கடப்பாட்டுடன் கடமையாற்றியுள்ளார். தெமாசெக்கின் 20 ஆண்டு காலப் பயணத்தில் அவர் குறிப்பிடத்தக்க பங்கு வகித்துள்ளார்," என்று நேற்று புகழாரம் சூட்டினார்.

வரவேற்பைப் பெற்றுள்ள 'ஏஆர்டி' கருவி விநியோகச் சாதனங்கள்

'ஏஆர்டி' பரிசோதனைக் கருவிகளை விநியோகிக்கும் இருபது சாதனங்கள் தனியார் மருத்துவமனைகளிலும் சில நிறுவனங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்பில், புதிய நிதித் தொழில்நுட்ப நிறுவனமான 'பீப் டெக்னாலஜிஸ்', மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனை உட்பட 'ஐஎச்எச் ஹெல்த்கேர் சிங்கப்பூர்' மருத்துவமனைகளுடன் இணைந்து பணியாற்றுகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறுகிறது.

ஒவ்வொரு சாதனத்திலும் 480 பரிசோதனைக் கருவிகள் வைக்கப்பட முடியும். இதன் மூலம் இதுவரை நேரடியாகப் பரிசோதனை நடத்த உதவிய தனது ஊழியர்களை அது குறைக்க முடிந்துள்ளது. முன்பு ஒவ்வொரு பரிசோதனை நிலையத்தில் இருந்து பணியமர்த்தப்பட்ட ஒன்பது ஊழியர்கள் இப்போது மூன்றாகக் குறைக்கப்பட்டுள்ளனர் என்று 'ஐஎச்எச் ஹெல்த்கேர் சிங்கப்பூர்' தெரிவித்துள்ளது.

இயந்திரத்திலிருந்து ஏஆர்டி கருவிகளைப் பெறுவதற்கு ஊழியர்கள் தங்கள் ஊழியர் அட்டையை இயந்திரத்தில் ஸ்கேன் செய்ய வேண்டும். சுகாதார அபாய எச்சரிக்கை குறுந்தகவல் பெறும் பொதுமக்களும் அவ்வாறு தங்கள் அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு ஊழியர் அட்டையை ஸ்கேன் செய்து பரிசோதனைக் கருவிகளைப் பெறுவார்கள். இவ்வகை விநியோகச் சாதனங்கள் தேசிய பல்கலைக் கழக மருத்துவமனை, இங் டெங் ஃபோங் மருத்துவமனை, அலெக்ஸ்சாண்ட்ரா மருத்துவமனை ஆகிய இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

ஆறு மருத்துவமனைகளில் ஏழு படுக்கைப் பிரிவுகள் மூடப்பட்டுள்ளன

மருத்துவமனைப் படுக்கைப் பிரிவுகளுக்கு (வார்டுகள்) வருகையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என சுகாதார அமைச்சு கடந்த வாரம் அறிவித்ததை அடுத்து, ஆறு பொது மருத்துவமனைகளில் உள்ள ஏழு படுக்கைப் பிரிவுகள் இரு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளன.

130 மருத்துவமனை ஊழியர்களும் கொவிட்-19 அல்லாத பிரச்சினைகளுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்ட நோயாளிகள் ஆகியோருக்கு கொவிட்-19 கிருமித் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் மருத்துவ மற்றும் துணை ஆதரவு ஊழியர்கள் பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.

"தற்போது பொது மருத்துவமனைகளில் உள்ள 15% படுக்கைகளே கொவிட்-19 நோயாளிகளுக்காக பயன் படுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஊழியர்களின் இடங்களை தற்காலிகமாக நிரப்ப, மருத்துவமனைகளில் இதர பிரிவு களிலிருந்து ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்," என்று சுகாதார அமைச்சு விவரித்தது.

பொது மருத்துவமனைகளில் உள்ள ஊழியர்களில் ஒரு விழுக்காட்டுக்குக் குறைவானவர்களே கடந்த மாதம் 13ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை பணி விடுப்பு, வீட்டில் தங்கும் உத்தரவு, தனிமைப்படுத்தும் உத்தரவு, சுகாதார அபாய எச்சரிக்கை ஆகியவற்றின் கீழ் வைக்கப்பட்டனர் என்றும் அமைச்சு கூறியது.

"இந்தச் சூழ்நிலையிலும் நமது மருத்துவமனைகள், பொதுமக்களுக்கும் கொவிட்-19 நோயாளிகளுக்கும் கொவிட்-19 அல்லாத நோயாளிகளுக்கும் தொடர்ந்து சேவையாற்றி வருகின்றன," என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் சொன்னார்.