கொவிட்-19 தடுப்பூசி செலுத்துதல் இப்போது தாதியருக்கு சற்று எளிதாகி விட்டது. ஊசியில் மருந்தை ஏற்றும் அவர்களின் வேலையை இப்போது இயந்திரமே செய்துவிடுகிறது.
எவிட் எனப்படும் தானியக்க தடுப்பூசி மருந்து நிரப்பும் இயந்திரத்தின் எடை 25 கிலோகிராமுக்குக் குறைவு. அது ஐந்து நிமிடங்களுக்குக் குறைவாக ஆறு ஊசிகளில் தடுப்பு மருந்தை நிரப்பி விடும்.
இந்தப் புத்தாக்க முறை, இயந்திர மனிதப் பாகங்கள், அறிவார்ந்த உணர்கருவிகள், மின்னிலக்க தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் சாத்தியமாகி உள்ளது.
ஆறு ஊசிகளில் தடுப்பு மருந்தை ஒரு தாதி நிரப்புவது அவரது அனுபவம், அவர் எந்த அளவுக்குக் களைப்பாக இருக்கிறார் என்பதைப் பொறுத்துள்ளது.
இந்த முறையால், ஒரு தாதி ஊசியில் மருந்தை நிரப்புவதை விடுத்து, தடுப்பூசி பெறுபவர்களிடம் அதிக கவனத்தையும் பராமரிப்பையும் செலுத்தலாம். மேலும் தாதியருக்குக் களைப்பு கார ணமாக மனிதத் தவறு நிகழாமலும் தடுக்கலாம்.
இந்த இயந்திரம் தற்போது ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பு மருந்தை ஊசிக்குள் நிரப்பப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மற்ற தடுப்பு மருந்துகளையும் ஊசிக்குள் நிரப்ப, சாதனத்தில் மாற்றங்களைக் கொண்டு வரலாம்.
தற்போது எவிட் இயந்திரங்கள் ஏழு தடுப்பூசி நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அவற்றில் செஞ்சா-கேஷ்யூ சமூக மன்றம் அதை முதன் முதலாகக் கடந்த ஜூலையில் பயன்படுத்தியது. தாம்சன் மருத்துவக் குழுமம் அந்தத் தடுப்பூசி நிலையத்தை நிர்வகிக்கிறது.
இந்தத் தடுப்பூசி நிலையங்கள் ஒரு நாளைக்கு 2,000 பேருக்குத் தடுப்பூசிகளைப் போட முடியும்.
இந்த தானியக்க இயந்திரச் செயல்பாட்டைக் கற்றுக்கொள்ள தாதியருக்கு ஒரு மணி நேரம் போதுமானது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

