நிலப் போக்குவரத்து ஆணையம் வசூலிக்கும் கட்டண வருவாய் சென்ற நிதியாண்டில் சரிந்ததால் அதன் வரவு செலவுப் பற்றாக்குறை மேலும் குறைந்துள்ளதாக ஆணையத்தின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2020/2021 நிதி ஆண்டில் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ஆண்டுக் கட்டண வருவாய் 30% சரிந்து, $607 மில்லியன் ஆனது என்றது ஆண்டறிக்கை.
கொவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் விளைவாக பொதுமக்கள் வீட்டில் இருந்து வேலை செய்ததுடன் தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தனர்.
பேருந்துப் பயணிகள் பெரும் அளவு குறைந்த காரணத்தால் ஆணையத்தின் பேருந்துக் கட்டண வருவாயில் சரிவு ஏற்பட்டது.
நோய்ப் பரவலுக்கு முன்னர் இருந்ததுடன் ஒப்பிடுகையில் தற்போது பேருந்துப் பயணிகள் எண்ணிக்கை 60%ஆக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் கடந்த வாரம் கூறினார்.
ஆணையத்தின் பேருந்துக் கட்டண வருவாயைத் தவிர்த்து, இதர செயல்பாட்டு வருவாய் 10% குறைந்து $275 மில்லியன் ஆனது. ரயில் போக்குவரத்து உரிமக் கட்டண உயர்வு, நிர்வாகக் கட்டண உயர்வு ஆகியவற்றால் இழப்பை ஓரளவு ஈடுகட்ட முடிந்தது.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் 12% குறைந்து $1.642 பில்லியன் ஆனது. அதே வேளையில், அதன் செயல்பாட்டு செலவு, கிட்டத்தட்ட 6% அதிகரித்து $4.586 பில்லியன் ஆக உயர்ந்தது.
கடந்த 2016/2017 நிதியாண்டில் $2.718 பில்லியனாக இருந்த ஆணையத்தின் செயல்பாட்டுச் செலவு ஐந்து ஆண்டுகளில் தொடர்ந்து உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்தத்தில், ஆணையத்தின் வரவு செலவுப் பற்றாக்குறை, 19% உயர்ந்து $2.904 பில்லியன் ஆனது.
அரசாங்கம் வழங்கிய சுமார் $2.888 பில்லியன் மானியத்தைக் கழித்த பின்னர் ஆணையத்தின் நிகரப் பற்றாக்குறை $16 மில்லியன் ஆகும்.

