பாய லேபார் வட்டாரத்தில் கடந்த 22ஆம் தேதி முன்பக்கக் கண்ணாடி உடைக்கப்பட்ட காரின் உரிமையாளர், அதே போன்ற சம்பவம் மீண்டும் நடந்தது என்று தெரிந்தவுடன் போலிசில் புகார் அளித்திருக்கிறார்.
அந்த வட்டார தரை வீடுகளில் நிறுத்தப்பட்ட இரண்டு கார்களின் கண்ணாடிகள் இதுவரை உடைக்கப்பட்டுள்ளன.
கடந்த 27ஆம் தேதி பின்னிரவில் அந்தப் பகுதியில் வேறு ஒரு காரின் கண்ணாடி உடைக்கப்பட்டதாகவும் அச்சம்பவம் காரில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவானதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
அது பற்றி படித்தவுடன் தமது காருக்கு நடந்த சேதம் பற்றி புகார் அளித்ததாக கடந்த 22ஆம் தேதி சேதப்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் தெரிவித்தார்.
கார் கண்ணாடியைப் பழுதுபார்த்தால் போதும் என்று தாம் முதலில் நினைத்ததாக அந்த 44 வயது நபர் கூறினார். ஆனால் ஒரு வாரத்துக்குப் பின்னர் மீண்டும் அவ்வாறு நடந்திருப்பதால், கார்களைச் சேதப்படுத்திய நபர் இன்னமும் அப்பகுதியில் நடமாடிக் கொண்டிருக்கலாம் என்று கருதியதாக அவர் சொன்னார்.
தமது வீடு உள்ள வரிசையில் தமது கார் மட்டும் சேதப்படுத்தப்பட்டது என்றும் காரில் ஏதும் திருட்டு போகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

