'எர்த்தன் பாட்' மிளகாய் தூள் மீட்டுக்கொள்ளப்பட்டது
இங்கு விற்கப்படும் 'எர்த்தன் பாட்' மிளகாய் தூளில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சுப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் ஒரு தொகுதி விற்பனையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டது. சிங்கப்பூர் உணவு அமைப்பு நேற்று இதைத் தெரிவித்தது.
நிம்ஸ் எனும் உள்ளூர் நிறுவனம் 'எர்த்தன் பாட்' வகை மிளகாய் தூளை உற்பத்தி செய்கிறது. அந்த வகை மிளகாய் தூளில் 'எஃப்லாக்சின்ஸ்' எனும் நச்சுவகை அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமாக இருந்ததை அமைப்பு கண்டறிந்தது. அதனால் மாசுபட்ட தொகுதியை மீட்டுக்கொள்ளும்படி சிங்கப்பூர் உணவு அமைப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
பிறப்பு குறைபாடுகளையும் உண்டாக்கும் 'எஃப்லாக்சின்ஸ்' நச்சுவகையை மிகக் குறைந்த அளவில் மட்டுமே உண்ண முடியும் என்றது அமைப்பு.
பாதிக்கப்பட்ட பொருளை வாங்கியோர் அதனை உண்ண வேண்டாம் என்று அமைப்பு அறிவுறுத்தியது.
கதைக்களம் இலக்கிய நிகழ்ச்சி
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் மாதந்தோறும் நடத்தும் கதைக்களம் நிகழ்ச்சியில் உள்ளூர் எழுத்தாளர் இந்திரஜித் கலந்துகொண்டு வாசகர்களுடன் உரையாடுவார்.
இம்மாதக் கதைக்களம் நிகழ்ச்சி, வரும் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 3ஆம் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை இணையம் வழி நடைபெறும்.
திரு இந்திரஜித்தின் சிறுகதைகளைப் பற்றி எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வி, சிவானந்தம் நீலகண்டன் இருவரும் பேசுவார்கள். வாசகர்களை ஈர்க்கும் எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ளும் உத்திகள் 'எழுத்தாளர் அங்கத்தில்' விளக்கப்படும். மாதாந்திர நூல் அறிமுகம், சிறுகதைப் போட்டிகளும் நடைபெறுகின்றன.
கதைக்களத்துக்கான சூம் இணைப்பு:
http://singaporetamilwriters.com/kathaikalamzoom/
சந்திப்பு எண்: 949 7590 1122
கடவு எண்: 142821
சிங்கப்பூரின் ஆகப் பழைமையான தியோச்சியூ ஆலயம் பற்றி நூல்
சிங்கப்பூரின் ஆகப் பழைமையான தியோச்சியூ ஆலயமான யுவே ஹாய் சிங் ஆலயத்தின் வரலாறு பற்றியும் சில ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு மேற்கொள்ளப்பட்ட புணரமைப்புப் பணிகள் பற்றியும் நூல் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
ராஃபிள்ஸ் பிளேசில் உள்ள அந்த ஆலயத்தின் ஐந்தாண்டு புணரமைப்புப் பணிகள் கடந்த 2014ஆம் ஆண்டு நிறைவடைந்தன. யுனெஸ்கோ எனும் ஐக்கிய நாட்டு கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பின் விருதையும் அது பெற்றது.
பணிகளை வழிநடத்திய மரபுடைமை பாதுகாப்பு நிபுணரும் சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழக ஆய்வாளருமான இயோ காங் ஷுவா, புதிய நூலை எழுதியுள்ளார்.
யுவே ஹாய் சிங் ஆலயம் 1820களில் கட்டப்பட்டது என்று டாக்டர் இயோ பிரிட்டிஷ் நூலகத்தில் மேற்கொண்ட ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

