வெளியுறவு அமைச்சர்: ஏற்கெனவே பொருளியல் சவால்; அதோடு கொவிட்-19 பாதிப்பு
மியன்மார் மக்களின் நிலை குறித்து சிங்கப்பூரும் அமெரிக்காவும் மிகவும் கவலை அடைந்து இருப்பதாகவும் மனக் கலக்கத்தில் இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் புதன்கிழமை தெரிவித்தார்.
மியன்மார் மக்கள் ஏற்கெனவே கடுமையான பல்வேறு பொருளியல் பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள் என்றும் அவற்றோடு கொவிட்-19 கிருமித்தொற்று அந்த நாட்டை மேலும் பாதித்து இருப்பதாகவும் அமைச்சர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்து உள்ளது.
டாக்டர் விவியன் வாஷிங்டன் சென்று இருந்தார். அமெரிக்க பயணத்தின்போது அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் டாக்டர் விவியன் பேச்சு நடத்தினார்.
அந்தப் பேச்சின்போது மியன்மார் விவகாரம் விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
மியன்மார் தொடர்பில் சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் பல கவலைகள் இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர், மியன்மாரில் அதிகரிக்கும் ஏழ்மை, பிப்ரவரி 1ஆம் தேதி இடம்பெற்ற ராணுவப் புரட்சி, அதன் விளைவாக ஏற்பட்டுள்ள வன்செயல் ஆகியவற்றை அதற்கான காரணங்களாகச் சுட்டிக்காட்டினார்.
மியன்மாரின் பிரச்சினைக்கு அந்த நாடுதான் தீர்வு காணவேண்டும் என்று சிங்கப்பூரும் அமெரிக்காவும் நம்புவதாகவும் டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.
மியன்மார் மக்கள், தலைவர்கள், அரசியல் தலைவர்கள், எல்லாரும் ஒன்றுகூடி, நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கலந்து பேசி தீர்வுகாணவேண்டும் என்று அமைச்சர் கருத்துக் கூறினார்.
"இப்படி ஓரு தீர்வுகாண பலவந்தமாக நாம் நெருக்க முடியாது. இருந்தாலும் இதற்கு ஊக்கமூட்டலாம். அதைச் சாதிக்கும்படி நமக்கே உரிய வழிகளில் அவர்களை நாம் வலியுறுத்தலாம்," என்று தெரிவித்த டாக்டர் விவியன், என்றாலும் அத்தகைய பேச்சுவார்த்தைக்கான அறிகுறி இனிமேல்தான் தனக்குத் தெரியவர வேண்டும் என்றார்.
மியன்மாருக்கு உதவ ஆசியான் முயற்சி எடுத்து வருகிறது.
புருணையின் இரண்டாவது வெளியுறவு அமைச்சர் யூசோப், மியன்மாருக்கான ஆசியானின் சிறப்புத் தூதராக கடந்த ஆகஸ்ட்டில் நியமிக்கப்பட்டார்.
மியன்மாரில் அனைத்துத் தரப்பினரையும் சந்திக்க அந்தத் தூதருக்கு அனுமதி கிடைக்கும்; மியன்மார் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க அவரால் உதவ முடியும் என்ற நம்பிக்கையுடன் தாங்கள் காத்து இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.

