முதியோர், இளையோர் சேர்ந்து அனுபவம், விருப்பக் கதைகளை எழுதும் மசெக திட்டம் தொடக்கம்; 500 ஜோடிகள் இலக்கு

முதியோர், இளையோர் சேர்ந்து அனுபவம், விருப்பக் கதைகளை எழுதும் மசெக திட்டம் தொடக்கம்; 500 ஜோடிகள் இலக்கு

3 mins read
5364cb54-7c4e-485d-8e47-0a907222ecf9
திடல்தட நட்சத்திரம் சி. குணாளன் (வலது) மக்கள் செயல் கட்சி முதியோர் பிரிவின் 'வாழ்வில் முத்திரை பதியுங்கள்' என்ற செயல்திட்டத்தின் கீழ் ஏழு வயது கீகன் டான் என்ற சிறுவனுடன் சேர்ந்து உருவாக்கிய ஒரு புத்தகத்தை பார்வையிடுகிறார். படம்: மக்கள் செயல் கட்சி -

மக்­கள் செயல் கட்­சி­யின் முதியோர் பிரிவு ஒரு புதிய செயல்­திட்­டத்தை நேற்று தொடங்­கி­யது. 500 ஜோடி முதி­யோ­ரை­யும் இளை­யோ­ரை­யும் ஒன்றுசேர்த்து, அவர்­கள் ஒன்றாகச் சேர்ந்து தங்­க­ளு­டைய வாழ்க்கை அனு­ப­வங்­க­ளை­யும் ஆசை விருப்பங்­க­ளை­யும் பற்றி கதைகளை எழு­து­மாறு செய்­வது அந்­தச் செயல்­திட்­டத்­தின் நோக்­கம்.

'வாழ்வில் முத்­திரை பதி­யுங்­கள்' என்ற அந்­தச் செயல் திட்­டத்­தில் சிங்­கப்­பூ­ரின் மிகப் பிர­ப­ல­மான திடல்­தட நட்­சத்­தி­ரம் சி. குணா­ளன், ஜேஸ் இசை வல்­லு­நர் ஜெரிமி மோன்­டெய்ரோ, முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான திரு­வாட்டி யூ ஃபூ யீ ஷூன், ஹவாசி டைப்பி, லில்லி நியோ ஆகி­யோர் சேர்ந்து இருக்­கி­றார்­கள்.

ஐநா­வின் அனைத்­து­லக முதியோர் தினம் ஒவ்­வோர் ஆண்டும் அக்­டோ­பர் 1ஆம் தேதி (இன்று) கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கிறது. அதற்கு முன்­ன­தாக மசெக முதியோர் குழு­வும் சமூக அற­நிறுவன அமைப்­பும் அந்­தச் செயல்­திட்­டத்தைக் கூட்­டா­கத் தொடங்­கின.

இது பற்றி கருத்து தெரி­வித்த அந்­தச் செயல்­திட்­டத்­தின் ஏற்­பாட்டுத் தலை­வ­ரும் ஹாலந்து புக்கிட் தீமா குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எட்­வர்ட் சியா, பல தலை­மு­றை­க­ளுக்­கும் உரிய வேறு­பட்ட வெவ்­வே­றான வாழ்க்கை அனு­ப­வங்­களைப் பகிர்ந்து கொள்­வ­தற்­கான இந்­தக் கூட்டு முயற்­சி­க­ளின் மூலம் அதி­க­மான சிங்­கப்­பூ­ரர்­கள் கடந்த காலத்தைப் பெரு­மை­யாக நினைத்து நிகழ்­கா­லத்­தைப் போற்றி, நம்­ முதியோர் உள்­ளிட்ட பொது எதிர்­கா­லத்தைப் பலப்­ப­டுத்­து­வார்­கள் என்­பதே நம்­பிக்கை என்று தெரி­வித்­தார்.

"முதி­யோ­ருக்­கும் இளை­யோருக்கும் இடை­யில் பல தலை முறை கடந்த உற­வு­களைப் பலப்­படுத்தி, நமது பன்­மயக் கண் ணோட்டம் பற்­றிய ஆழ­மான புரிந்­து­ணர்வைப் பேணி வளர்க்­கலாம் என்­ப­தும் நமது நம்­பிக்கை," என்று மூத்­தோர் குழு துணைத் தலை­வரும் கெபுன் பாரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஹென்றி குவெக் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரின் திடல்­தட நட்­சத்­தி­ர­மாக ஜொலிக்­கும் திரு குணாளன், 78, கீகன் டான் என்ற ஏழு வயது சிறு­வ­னு­டன் இந்­தத் திட்­டத்­தில் சேர்ந்து இருக்­கி­றார்.

இந்­தச் சிறு­வன் படங்­களை வரைந்து ஒரு கதையை எழுதி இருக்­கி­றார். திரு குணா­ள­னி­டம் இருந்து ஆலோ­சனை பெற்று அரக்கன் ஒரு­வனை தோற்­க­டிக்­கும் துடிப்­பு­மிக்க கதா­நா­ய­க­னாக தன்னை உரு­வ­கப்­ப­ப­டுத்தி இந்­தச் சிறு­வன் அந்­தக் கதையை எழுதி இருக்­கி­றார்.

அந்த 10 பக்க முத்­திரை பதி­யுங்­கள் புத்­த­கத்­தில் பாதியை திரு குணா­ளன் எழுதி இருக்­கி­றார்.

தென்னை மரத்­தில் இருந்து தேங்­காய் பறித்­தது, கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட பகு­திக்­குள் நுழைந்­த­தற்­காக போலிஸ் நிலை­யத்­திற்கு அனுப்­பப்­பட்­டது போன்ற தனது சிறு வயது அனு­ப­வங்­களை அதில் அவர் தெரி­வித்து இருக்­கி­றார்.

"நான் இந்­தச் சிறு­வ­னைப் போல் இருந்­த­போது நான் செய்த செயல்­களைப் பற்றி இந்­தச் சிறு­வன் தெரிந்­து­கொள்ள வேண்­டும் என்­பது எனது விருப்­பம்," என்­றார் திரு குணா­ளன்.

இத­னி­டையே, முதிய சிங்­கப்­பூரர்­களும் இளை­யர்­களும் முன்­வந்து இந்­தத் திட்­டத்­தில் இன்று முதல் அக்­டோ­பர் 29ஆம் தேதி வரை இணைய முக­வரி மூலம் கலந்­து­கொள்­ள­லாம் என்று மசெக முதி­யோர் குழு வெளி­யிட்ட செய்தி அறிக்­கை­ தெரி­வித்­துள்­ளது.

கலந்­து­கொள்­ளும் ஒவ்­வொ­ரு­வரும் தனக்கு முன்­பின் தெரி­யாத ஒரு­வ­ரு­டன் ஜோடி சேர்க்­கப்­ப­டுவர்.­

தெரிந்­த­வர்­க­ளு­டன் சேர்ந்து கொள்ள விரும்­பி­னால் அதற்­கும் வழி­யுண்டு. ஒவ்­வொ­ரு­வ­ரும் சுமார் இரண்டு வார காலத்­தில் தான் சார்ந்த கதையை எழு­த­வேண்­டும்.

வாழ்வில் முத்­திரை பதி­யுங்­கள் புத்­த­கத்தை எழுதி முடித்து அதை நவம்­பர் 30ஆம் தேதிக்­குள் தாக்கல் செய்­ய­வேண்­டும்.