செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
2d6b4c62-ee57-4236-b59d-c1e262063738
-

குடியிருப்பு இடங்கள் விற்பனை

நகர மறுசீரமைப்பு ஆணையம், மூன்று குடியிருப்பு இடங்களை விற்பனைக்கு விட்டு இருக்கிறது.

லெண்டோர் ஹில்ஸ் ரோடு, ஜாலான் தெம்புசு ஆகிய பகுதிகளில் அவை அமைந்து இருக்கின்றன.

2021 இரண்டாம் பாதி அரசு நில விற்பனை செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக அந்த இடங்கள் விற்பனைக்கு விடப்பட்டு இருக்கின்றன.

அந்த மூன்று இடங்களில் இரண்டு இடங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலிலும் ஓர் இடம் ஒதுக்கிவைக்கப்படும் இடங்கள் பட்டியலிலும் உள்ளன. அவற்றுக்கான ஒப்பந்தப்புள்ளி கோருவது அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு முடிவடையும்.

சீர்திருத்த பயிற்சியில் இளைஞர்

இணையத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு உள்ள ஒரு பெண்ணைப் போல் நடித்து பலரையும் ஏமாற்றிய ஒருவர் சீர்திருத்த பயிற்சியின் கீழ் வைக்கப்பட்டார்.

ஜெரில் லிம் ஜிங் காய், (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) என்ற இந்தக் குற்றவாளிக்கு இப்போது வயது 19. நன்னடத்தைக் கண்காணிப்பில் இருந்த இவர், புதிய ஆறு குற்றங்களைச் செய்ததை ஒப்புக்கொண்டார்.

அதையடுத்து நன்னடத்தை கண்காணிப்பு தண்டனை ரத்து செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக சிங்கப்பூரரான அந்தப் பதின்ம வயது இளைஞருக்கு குறைந்தபட்சம் ஆறு மாதம் சீர்திருத்த பயிற்சி தண்டனை விதிக்கப்பட்டது.

இதன்படி ஓர் இடத்தில் அவர் தடுத்து வைக்கப்படுவார். உடற்பயிற்சி, ஆலோசனை உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் அவருக்கு விதிக்கப்படும்.

பொது இடத்தில் சண்டையிட்டதற்காக அந்த இளைஞர் நன்னடத்தைக் கண்காணிப்பின்கீழ் இருந்தார். அப்போது அவர் இணையத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்ணை போல் நடித்து இரு ஆடவர்களிடம் இருந்து மொத்தம் $4,000 ஏமாற்றிதாகத் தெரிவிக்கப்பட்டது.

சந்தேக ஆடவர் கைது

கடன்முதலை அலைக்கழிப்புச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டு உள்ளதாக நம்பப்படும் 21 வயது ஆடவர் கைதானார்.

ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 1, பூன் லே அவென்யூ, ஜூ செங் ரோடு ஆகியவற்றில் உள்ள மூன்று அடுக்குமாடி வீடுகளில் தீ மூட்டப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அந்தச் சந்தேகப்பேர்வழி புதன்கிழமை பிடிபட்டார்.

போதைப்பொருட்கள் என்று நம்பப்படும் பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

இதன் தொடர்பில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு புலன்விசாரணை நடத்தி வருகிறது. அவர் மீது இன்று குற்றம் சுமத்தப்படும் என்று போலிஸ் தெரிவித்தது.

8 பாக்கெட் சிகரெட் கொள்ளை:

3 ஆண்டுகள் சிறை, 12 பிரம்படி

புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 52ல் செயல்படும் 7-லெவன் கடையில் ஏப்ரல் 19ஆம் தேதி அதிகாலை சுமார் 4.10 மணிக்கு எட்டு பாக்கெட் சிகரெட்டுகளை கொள்ளை அடித்ததற்காக முகம்மது இஸ்மாயில் சைனுதின், 40, என்பவருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு 12 பிரம்படிகள் கொடுக்கும்படி உத்தரவிடப்பட்டது. பாதுகாவல் அதிகாரியாக பணியாற்றிய அந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். சிறைத் தண்டனை, அவர் ைகதான ஏப்ரல் 19ஆம் தேதியில் இருந்து தொடங்கும்.