திருவாட்டி சேலி ஆங் என்பவரின் மகளுக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வுக்கு முன்தினம் இரவான நேற்று, தம் மகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். மூச்சு விடுதல் சம்பந்தமான தொற்று சிறுமிக்கு இருந்ததை மருத்துவர் கண்டறிந்தார். அன்றிரவு 'ஏஆர்டி' பரிசோதனை மூலம் நோய்த்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தியபோதும், பிசிஆர் பரிசோதனையில் நோய்த்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது கல்வி அமைச்சின் நிபந்தனை. ஆனால், பிசிஆர் பரிசோதனை முடிவுகள் தெரிய நேரம் தேவைப்பட்டதால் திருவாட்டி சேலி-யின் மகள் ஆங்கிலப் பாடத் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
தமது மகளை வயிற்றுவலிக்காக மருத்துவரிடம் அழைத்துச் சென்றதை எண்ணி திருவாட்டி ஆங் தம்மை தாமே நொந்துகொண்டார். மறுநாள் வெளிவந்த பிசிஆர் முடிவில் சிறுமிக்கு நோய்த்தொற்று இல்லாதது உறுதிசெய்யப்பட்டது. சிறுமி இன்று கணக்குத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது. தடைகாப்பு உத்தரவு விதிக்கப்பட்ட 39,300 மாணவர்களில் 560 மாணவர்கள், அதிலிருந்து விடுப்பு பெற்று, நேற்று தொடக்கப்பள்ளி இறதியாண்டு தேர்வு எழுதினர். தகுதி பெற்ற மாணவர்களில் ஏறத்தாழ 99.4 விழுக்காட்டினர் ஆங்கிலப்பாடத் தேர்வு எழுதினர் என்று கல்வி அமைச்சு நேற்று தெரிவித்தது. 236 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று தெரிய வந்துள்ளது.

