தமது பதின்ம வயது மகனைத் தாக்குவதை நிறுத்த வேண்டும் என்று கூறி மாது ஒருவருக்கு எதிராக 2017ல் தனிநபர் பாதுகாப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த மாது அந்த உத்தரவை இந்த ஆண்டு பலமுறை மீறியுள்ளார்.
அவர் தமது 16 வயது மகனை நோக்கி பீங்கான் பாத்திரத்தை வீசினார். அது மகனின் முகவாய் கட்டையில் பட்டு ரத்தம் வெளிவந்தது.
மற்றொரு சம்பவத்தில் அந்தத் தாய் சைக்கிள் பூட்டைக் கொண்டு மகனைத் தாக்கியதில் மகனின் வலது தோள்பட்டையில் ஒரு சிறு வெட்டுக்காயம் ஏற்பட்டது.
தனிநபர் பாதுகாப்பு உத்தரவை மீறி தமது மகனைத் தொடர்ந்து தாக்கிய அந்த 40 வயது மாதுக்கு நேற்று முன்தினம் 27 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மகனின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு அவரது பெயரை வெளியிட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தம் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் அந்த மாது ஒப்புக்கொண்டார்.
தமது சொந்தப் பிள்ளைக்கு எதிரான வன்முறையைப் பயன்படுத்தியதால் அண்மையில் தாயார் சிறைக்கு அனுப்பப்பட்ட இரண்டாவது சம்பவம் இது.
தமது ஆறு வயது, பத்து வயது மகள்களைக் கொடுமைப்படுத்தியதால் கடந்த புதன்கிழமையன்று 38 வயது தாயார் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார்.
தற்போதைய சம்பவத்தில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தமது மகன் மீது ஆத்திரம் கொண்ட அந்தத் தாயார் பீங்கான் பாத்திரத்தை வீசியதுடன், ஏப்ரல் 6ஆம் தேதி காலணியை அதற்குரிய இடத்தில் வைக்காத காரணத்தால் மகனைத் திட்டினார். அவர்களுக் குள் வாக்குவாதம் வலுத்தது.
அதில் கோபமடைந்த மாது சிகரெட் துண்டுகள் அடங்கிய ஒரு குவளையை அந்த மகனை நோக்கி வீசினார். அது அவரது நெஞ்சுப் பகுதியில் பட்டு அவருக்கு வலியை ஏற்படுத்தியது.
கடந்த ஜூலை 30ஆம் தேதி இரவு 10.15 மணிக்கு வீடு திரும்பியபோது வீட்டின் இரும்புக் கதவு சைக்கிள் பூட்டினால் பூட்டப்பட்டிருந்ததைப் பார்த்த மகன், தாயாரின் கவனத்தைப் பெற வீட்டின் மின்சார இணைப்பை அணைத்தார். வீட்டுக்குள் சென்ற மகனைத் தாயார் சைக்கிள் பூட்டினால் தாக்கினார். தமது அறைக்குள் ஓடிய மகன் போலிசை அழைத்தார். தாயார் கைது செய்யப்பட்டார்.
ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்துக்கும் அந்த மாதுக்கு மூன்றாண்டு சிறையும் $5,000 அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

