8 வாரகால சுய பரிசோதனை ஏற்பாடு: அரசு ஊழியர்களுக்காக 1.2 மில்லியன் கருவிகள்

2 mins read
2d73683f-2b10-49f9-8dd8-d86844801ba8
-

பொதுத்துறை அதிகாரிகள் வாரம் ஒருமுறை என்ற கணக்கில் இரண்டு மாதம் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்வதற்காக 1.2 மல்லியனுக்கும் மேற்பட்ட ஏஆர்டி விரைவுப் பரிசோதனைக் கருவிகள் ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளன.அந்தச் சுய பரிசோதனை ஏற்பாடு பற்றி செப்டம்பர் 6ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

வேலைக்குச் செல்ல வேண்டிய தேவை இருக்கின்ற, தங்களைப் பதிந்துகொண்டு உள்ள ஊழியர்கள், வாரம் ஒரு முறை என்ற கணக்கில் இரண்டு மாத காலம் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பது அந்த ஏற்பாடு. இந்தச் செயல்திட்டத்தில் பதிந்துகொண்டுள்ள முதலாளிகளிடம், ஒவ்வோர் ஊழியருக்கும் எட்டு என்ற கணக்கில் சுய பரிசோதனைக் கருவிகள் ஒப்படைக்கப்படும்.

இத்தகைய சுயபரிசோதனை கட்டாயமில்லாத நிறுவனங்களைப் பொறுத்தவரை, வேலை இடத்திற்கு வந்து வேலை பார்க்கவேண்டிய ஊழியர்களைக் கொண்டிருந்தால் அவை இதில் சேர்ந்துகொள்ளலாம்.சிங்கப்பூரின் ஆகப்பெரிய முதலாளியான பொதுத் துறை தன்னுடைய 153,000 பொதுத் துறை ஊழியர்களுக்கத் தலா எட்டு கருவிகளை கொடுக்கிறது.

16 அமைச்சுகளிலும் 50க்கும் மேற்பட்ட ஆணை பெற்ற கழகங்களிலும் பணியாற்றும் அதிகாரிகளுக்காக 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட கருவிகளை அது வழங்குகிறது.

இதனிடையே, சமூகத் தொற்று வேகமாகி வருவதைக் கருத்தில்கொண்டு பொதுத் துறையில் காலக்கிரம முறைப்படி ஊழியர் சுய பரிசோதனை ஏற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது என்று பொதுச் சேவைப் பிரிவு கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இடைவிடாமல் வழக்கமாக பரிசோதனை செய்துகொள்வதால் தொற்று இருந்தால் உடனே தெரியவரும். கிருமி தொற்றியவரை உடனடியாக தனிமைப்படுத்தி தொற்று பரவாமல் தடுத்து, வேலை இடத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வழி இருக்கும் என்று அது மேலும் குறிப்பிட்டது. ஊழியர்கள் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று, கொவிட்-19 சிறப்புப் பணிக்குழுவின் இணைத்தலைவரான வரத்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங், சென்ற மாதம் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது வலியுறுத்தினார்.