சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று கூடிவருவதைச் சமாளிக்கும் வகையில் மருத்துவமனை வசதிகளும் சிகிச்சை வசதிகளும் அதிகப்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார்.
இப்போது 134 தீவிர சிகிச்சை படுக்கைகள் இருக்கின்றன. இந்த எண்ணிக்கை 180 ஆக்கப்படும் என்று நேற்று நடந்த கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
கொவிட்-19 சிகிச்சை நிலையங்களில் அமைக்கப்படும் மருத்துவமனை படுக்கைகளும் உறுதுணையாகத் திகழும். கடந்த வாரம் 580 படுக்கைகளுடன் இத்தகைய நான்கு நிலையங்கள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையங்களின் எண்ணிக்கை ஒன்பதாகக் கூட்டப்படும். அவற்றில் ஏறத்தாழ 3,700 படுக்கைகள் இருக்கும்.
இந்த இலக்கு இம்மாத முடிவில் எட்டப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதைச் சாதிக்கும்போது மருத்துவமனைக்கு வெளியே நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியும். இதனால் மருத்துவமனைகளுக்குச் சுமை குறையும் என்று அவர் விளக்கினார்.
நல்ல உடல்நிலையுடன் இருக்கக்கூடிய ஆனால் குடும்பத்தாருடன் சேர்ந்திராமல் தனிமையில் இருக்கவேண்டிய தேவை உள்ளவர்களுக்காக சமூகப் பராமரிப்பு நிலையங்கள் இருக்கின்றன.
இவற்றில் இப்போது 4,300 படுக்கைகள் உள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதில் மேலும் ஓர் ஏற்பாடாக வீட்டிலிருந்தே குணமடையும் செயல்திட்டம் நடைமுறையில் உள்ளது.
இத்தகைய நோயாளிகளுக்கான தொலை மருத்துவச் சேவை ஏற்பாடு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

