வஞ்சகமான ஓர் அரசாங்கம் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக்கூடிய அபாயத்தைவிட வஞ்சக எண்ணத்துடன் ஏற்படக் கூடிய வெளிநாட்டு தலையீடு அபாயம் அதிகம் உள்ளதாக உள்துறை அமைச்சர் கா சண்முகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வெளிநாட்டு தலையீடு தடுப்பு நடவடிக்கைகள் உத்தேச சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், அந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் அதன் கீழ் அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் பரந்த அளவிலான அதிகாரங்கள் நியாயம்தானா என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
புதிய உத்தேச சட்டத்தின்கீழ் கொடுக்கப்பட்டு உள்ள அதிகாரங்கள் பயன்படுத்தப்படுவதை உச்ச நீதிமன்ற நீதிபதியைத் தலைமையாகக்கொண்ட ஒரு நடுவர் குழு ஆராயமுடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அந்தக் குழுவின் முடிவு வெளியிடப்படும். மக்கள் அதைப் பார்த்து தங்களுக்குத் தாங்களே மதிப்பிட்டுக்கொள்ளலாம் என்றும் திரு சண்முகம் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் போன்ற அறிவுமிக்க மக்களைக்கொண்ட நாடுகளில் கடைசி முடிவு மக்களைப் பொறுத்தே இருக்கும் என்றாரவர். சிங்கப்பூரில் வஞ்சக எண்ணத்துடன் கூடிய அரசாங்கத்திற்கு மக்கள் ஒரு நாளும் ஆதரவு அளிக்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை சிங்கப்பூரர்கள் புரிந்துகொண்டு அதற்கான தேவையை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
தங்களுடைய சதிச் செயல்களை அரங்கேற்றுவதற்கு முன்னதாகவே பயங்கரவாதிகள் கைதுசெய்யப்பட இந்தச் சட்டம் அனுமதிக்கிறது. குற்றவியல் சட்டத்தை (தற்காலிக ஏற்பாடுகள்) மற்றொரு எடுத்துக்காட்டாக அமைச்சர் குறிப்பிட்டார்.
குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களையும் போதைப்பொருளைக் கையாளுவோரையும் விசாரணையின்றி தடுத்து வைக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.
சமூகத்தின் உரிமைகளைச் சமப்படுத்துவதைக் கருத்தில் கொள்ளாமல், குற்றம் சாட்டப்படும் ஒருவரின் உரிமைகளை மட்டும் அடிப்படையாகக்கொண்டு ஒவ் வொன்றையும் அணுகும் அணுகுமுறையைப் பின்பற்றினால் நாம் இன்று பெற்றிருக்கும் பாதுகாப்பான, குற்றச் செயல்கள் அற்ற சமூகத்தை எட்டியிருக்க முடியாது என்று அமைச்சர் கூறினார்.
வெளிநாட்டுத் தலையீட்டால் ஏற்படக்கூடிய பாதக பிரச்சினைகளை வழக்கமான நீதிமன்ற நடைமுறைப்படி கையாளுவது சாத்தியமா என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், இந்த உத்தேச சட்டம் பயனளிக்கக்கூடிய ஏற்பாடுகளை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தித் தருவதாக கூறினார்.
உத்தேச சட்டம் வெளிநாட்டுத் தலையீட்டுக்கு எதிரான முழுமையான பாதுகாப்பாக இருக்காது என்றாலும் அது உதவமுடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

