'பிசிஆர்' பரிசோதனையில் கொவிட்-19 கிருமித்தொற்று உறுதியான 70 வயதைத் தாண்டியோரை மருத்துவமனையில் சேர்க்க முன்னதாக 12 மணிநேரம் ஆகும். இப்போது 48லிருந்து 72 மணிநேரம் ஆகிறது. கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்ததால் சிங்கப்பூரின் சுகாதாரத் துறையில் நெருக்கடி ஏற்பட்டதற்கு இது ஓர் உதாரணம் என்று சுகாதாரத்துக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
பொது மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில் சுமார் 15 விழுக்காட்டுப் படுக்கைகள் கொவிட்-19 நோயாளிகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாக டாக்டர் ஜனில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் சுமார் 10 விழுக்காட்டினருக்கு அவை போதுமானதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். அவசர சிகிச்சை தேவை உள்ளவர்களுக்கென சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ வாகனங்கள் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளன. அதனால் கொவிட்-19 நோயாளிகளைப் பல்வேறு சுகாதாரப் பராமரிப்பு வசதிகளுக்குக் கொண்டு செல்ல சுகாதார அமைச்சு கூடுதலாக 95 மருத்துவ வாகனங்களைத் தயார்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
கடந்த மூன்று மாதங்களில் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகளில் கொவிட்-19 நோயாகளுக்கான படுக்கைகளின் பயன்பாடு 26லிருந்து 53 விழுக்காட்டிற்கு உயர்த்தப்பட்டதாகவும் டாக்டர் ஜனில் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்படும் நோயாளி களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகளின் பயன்பாடு 56லிருந்து 86 விழுக்காட்டிற்கு உயர்ந்துள்ளதாக அவர் சொன்னார். சமூகப் பராமரிப்பு வசதிகளில் உள்ள படுக்கைகளின் பயன்பாடும் 10லிருந்து 35 விழுக்காட்டிற்கு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கொவிட்-19 நோயாளிகளில் சுமார் இரண்டு விழுக்காட்டினருக்குக் கூடுதல் உயிர்வாயு அல்லது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை தேவைப்படுவதாக டாக்டர் ஜனில் தெரிவித்தார்.
தீவிர சிகிச்சை பிரிவுகளின் நிலவரத்தை அரசாங்கம் கூர்ந்து கவனித்து வருவதாகவும் அவர் சொன்னார். தீவிர சிகிச்சை பிரிவுகளில் கூடுதலாக 74 படுக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தேவைப்பட்டால் குறுகிய காலத்தில் மேலும் சில படுக்கைகளைச் சேர்க்கமுடியும் என்றும் டாக்டர் ஜனில் கூறினார். கிட்டத்தட்ட 400 சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் மருத்துவமனைகளின் மனிதவள நிலவரத்தையும் அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அவர் சொன்னார்.

