ஈசூன் அவென்யூ 6ல் ஒருவரை வெட்டியதாகச் சந்தேகிக்கப்படும் 39 வயது ஆடவர் ஒருவரும் 49 வயது மாது ஒருவரும் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.
தங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக நேற்று போலிசார் தங்கள் அறிக்கையில் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவருக்கு பல வெட்டுக்காயங்கள் இருந்ததாகவும் அவர் சுய நினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடலில் எந்தப் பகுதியில் அவருக்கு வெட்டுக்காயங்கள் இருந்தன என்ற விவரங்களை போலிசார் வெளியிடவில்லை.
சம்பவ இடத்துக்கு போலிஸ் வருவதற்குள் தாக்குதலை மேற்கொண்ட இருவரும் அங்கிருந்து தப்பித்துவிட்டனர்.
உட்லண்ட்ஸ் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குற்றம் நிகழ்ந்த நான்கு மணி நேரத்துக்குள் தாக்குதலில் ஈடுபட்டோரை அடையாளம் கண்டனர்.
சம்பவ இடத்தில் ஒரு நீளமான கத்தி கண்டெடுக்கப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட ஆடவர் மீது வேண்டுமென்றே ஆபத்தான ஆயுதத்தால் காயம் விளைவித்ததற்காக இன்று குற்றம் சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஏழாண்டு சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இவற்றில் ஏதாவது இரண்டு தண்டனைகயாக விதிக்கப்படலாம்.கைது செய்யப்பட்ட பெண் மீது தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றும் போலிசார் தெரிவித்தனர்.