கடற்துறைக்கும் கடல்சார் பொறியியல் துறைக்கும் உள்ளூர் ஊழியர்களை ஈர்க்க இரண்டு பணி மேம்பாட்டுத் திட்டங்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டன.
டிராஃப்டிங் வல்லுநர்கள், தர நிபுணர்கள் ஆகியோரை ஈர்ப்பதே இத்திட்டங்களின் இலக்கு.
சம்பளம், திறன்கள், வேலை தொடர்பான பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டுக்கோப்பான, முற்போக்கான பாதையை இந்தத் திட்டங்கள் வழங்கும்.
2021ஆம் ஆண்டு கடற்துறை வாரக் கருத்தரங்கில் இத்திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.
இத்திட்டங்களில் பங்குபெறுவோருக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
வேலைக்குத் தேவையான திறன்கள் அவர்களுக்குக் கற்றுத்தரப்படும்.
இதன்மூலம் அந்தத் துறை
களின் உற்பத்தித்திறன் மேம்படும் என்று நம்பப்படுகிறது.
அதுமட்டுமல்லாது, அவரவர் திறன்களைப் பொறுத்து சம்பளம் பெறலாம்.
ஆரம்பநிலையிலிருந்து உயர்
பதவி நிலை வரையிலும் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் கூடுதல் அனுபவம் பெறவும் இந்த அணுகுமுறை வகை செய்யும்.
இதனால் இத்துறைகளில் நீண்டகால வேலை வாய்ப்புகளைப் பெற முடியும்.
இத்திட்டங்கள் குறித்து தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் வேலை நியமன, வேலை வாய்ப்புக் கழகம், சிங்கப்பூர் கடற்துறை சங்கம், என்டியுசியின் மின்னணுவியல், கடற்துறை மற்றும் பொறியியல் குழுமம் ஆகியவை இணைந்து நேற்று அறிவித்தன.
"கடற்துறையும் கடல்சார் பொறியியல் துறையும் இணைந்து சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு $3.6 பில்லியன் பங்களித்தன. உலகளாவிய வர்த்தக நடுவமாக சிங்கப்பூர் கொண்டுள்ள நிலையை உறுதி செய்ய இது மிகவும் முக்கியம்."
"2025ஆம் ஆண்டுக்குள் இந்தத் தொகையை $5.8 பில்லியனாக உயர்த்தவும் 1,500 புதிய வேலைகளை உருவாக்கவும் திட்டங்கள் இலக்கு கொண்டுள்ளன," என்று மூன்று அமைப்புகளும் தெரிவித்தன.
"இந்தத் திட்டத்திற்காக தேர்்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த இரண்டு வேலைகளும் என்றென்றும் முக்கியமானவை. கடற்துறை, கடல்சார் துறை ஆகியவற்றுக்கு இவை இன்றியமையாதவை," என்று என்டியுசியின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் கூறினார்.
மேலும் சிங்கப்பூரில் ஊழியர் பற்றாக்குறை நிலவி வருவதால் இத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்
படுவது மிகவும் முக்கியம் என்றார் அவர். இளையர்களை ஈர்க்க இத்துறைகள் மாற வேண்டும் என்று குறிப்பிட்ட திரு இங், அவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கைத் தொழிலை ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கூறினார்.