கண்ணுக்குப் புலப்படாத சொத்துக்கு கூடுதல் முக்கியத்துவம்
நிறுவனங்கள் மீள்திறனுடன் இருப்பதன் அவசியத்தை கொவிட்-19 கொள்ளை நோய்ப் பரவல் எடுத்துக்காட்டியுள்ளதாக நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் குமாரி இந்திராணி ராஜா கூறியுள்ளார். இதன் தொடர்பில் நிறுவனங்கள் தங்களின் கண்ணுக்குப் புலப்படாத சொத்துகள், நீடித்த நிலைத்தன்மை அம்சம் ஆகியவற்றின் மீது கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் 'இன்ஸ்டிட்யூட் ஆஃப் வேல்வயுர்ஸ் அண்ட் அப்ரெய்சர்ஸ்' அமைப்பு மற்றும் 'ஐவிஎஸ்சி' எனப்படும் அனைத்துலக மதிப்பீட்டு வழிகாட்டி மன்றம் ஆகியவை மெய்நிகர் வாயிலாக நடத்திய கலந்துரையாடலின் தொடக்க உரையில் குமாரி இந்திராணி இவ்வாறு சொன்னார்.
புத்தாக்கம், புதிய தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவை பொருளியலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் காப்புரிமைகள் போன்ற கண்ணுக்குப் புலப்படாத சொத்துகள் கூடுதல் முக்கியத்துவம் பெற்று வருவதை அவர் சுட்டினார்.
காதலியைக் கத்தியால் மிரட்டிய பணிப்பெண்ணுக்குச் சிறை
தனது காதலி திறன்பேசி ஒன்றை ரகசியமாக வைத்திருந்தார் என்று நினைத்து கோபமடைந்த பணிப்பெண், அவரை அறைந்து கத்தியால் மிரட்டியிருக்கிறார். 44 வயது கலெஸ்ட்ரெ எலீனா கான்டோ என்ற அந்தப் பணிப்பெண்ணுக்கு மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மிரட்டியதாகச் சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார். தாக்குவதற்குப் பயன்படக்கூடிய ஆயுதத்தைப் பொது இடத்தில் வைத்திருந்தது, வேண்டுமென்றே காயப்படுத்தியது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளும் தீர்ப்பளிக்கும்போது கருத்தில் கொள்ளப்பட்டன.
மிரட்டிய குற்றத்திற்கு கலெஸ்ட்ரெக்கு அதிகபட்சமாக ஈராண்டுச் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.
லீ சியன் யாங்கின் வீடு 13 மில்லியன் வெள்ளிக்கு விற்பனை
கேல்டிக்காட் ஹில் பகுதியில் உள்ள திரு லீ சியன் யாங், அவரது மனைவி திருமதி லீ சுவெட் ஃபெர்ன் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு மாடி உயர்தர பங்களா 13 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டுள்ளது. மேலும், அருகிலிருக்கும் மற்றொரு பங்களாவையும் அவர்கள் விற்பனைக்கு விட்டுள்ளனர். அதன் விலை 16.8 மில்லியன் வெள்ளி.
இரண்டு வீடுகளும் மீடியாகார்ப் நிறுவனத்தின் பழைய வளாகம் இருந்த கேல்டிக்காட் குளோசில் அமைந்துள்ளன. சிங்கப்பூர் நில ஆணையத்தின் இணையத்தளத்தில் தேடியபோது பிரதமர் லீ சியன் லூங்கின் இளைய சகோதரரான திரு லீ சியன் யாங், அவரது மனைவி இருவரும் அந்த வீடுகளின் கூட்டு உரிமையாளர்கள் என்பது தெரியவந்தது. விற்கப்பட்ட வீடு அமைந்துள்ள நிலத்தின் பரப்பளவு 921.6 சதுர மீட்டர். அதை சிங்கப்பூர் வர்த்தகர் ஒருவர் 13 மில்லியன் வெள்ளிக்கு வாங்கியுள்ளார். மற்றொரு பங்களா அமைந்திருக்கும் நிலத்தின் பரப்பளவு 918.5 சதுர மீட்டர். இது குறித்து கேட்டபோது திருமதி லீ சுவெட் ஃபெர்ன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

