செய்திக்கொத்து

3 mins read
0fc14659-9d21-4298-8808-53514c2f9917
-

மூத்தோரின் மருத்துவக் கண்காணிப்புக்கு உதவும் திட்டம்

மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் தனியாக வாழும் முதியவர்கள் தங்கள் மருந்துகள், உணவுமுறை, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தேதிகள் ஆகியவற்றைக் கண்காணிக்க புதிய வசதி செய்து தரப்பட்டுள்ளது. தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை நேற்று இதற்கான திட்டத்தைத் தொடங்கியது.

'சில்வர் படி' எனும் இத்திட்டத்தில் முதியவர்கள் ஒவ்வொருவருக்கும் உதவ ஒரு தொண்டூழியர் இருப்பார்.

அவர்களுக்காக 'படி ஏய்ட்' எனும் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அவர்கள் மருந்தை உட்கொள்ளும் முறை, மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய தேதி பற்றி நினைவுபடுத்துதல் போன்ற வேண்டிய தகவல்களைப் பெறலாம்.

சுகாதாரப் பராமரிப்பின் உருமாற்றத்துக்கான சுகாதார அமைச்சின் அலுவலகமும் தேசிய சமூக சேவை மன்றமும் இணைந்து கடந்தாண்டு ஜூலையில் தொடங்கிய சவாலில் இத்திட்டம் வெற்றி பெற்றது.

இரண்டு சிங்கப்பூரர்களுக்கு தென்கிழக்காசிய இலக்கிய விருது

எழுத்தாளர்கள் சைமன் டே, நாடக ஆசிரியர் நாடிபுத்ரா ஆகிய இருவருக்கும் சிங்கப்பூருக்கான தென்கிழக்காசிய எழுத்து விருது வழங்கப்பட்டிருக்கிறது.

வட்டார அளவிலான இந்த விருது பத்து ஆசியான் நாடுகளைச் சேர்ந்த முன்னணி எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் கடந்த 1979ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

முனைவர் டேக்கு 2019ஆம் ஆண்டுக்கான விருதும் நாடிபுத்ராவுக்கு கடந்தாண்டுக்கான விருதும் வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் புத்தக மன்றம் நேற்று தெரிவித்தது. கொவிட்-19 சூழலால் விருது வழங்கும் நிகழ்ச்சி அடுத்த ஆண்டு நடைபெறும்.

முனைவர் சைமன் டே, நாவல், கவிதைகள், சிறுகதைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். அவர் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் சிங்கப்பூர் அனைத்துலக விவகார ஆய்வுக் கழகத்தின் தலைவரும் ஆவார். அல்மாடி அல்ஹஜ் இப்ராஹிம் எனும் நாடிபுத்ரா மலாய் நாடகத் துறையில் பழுத்த அனுபவம் பெற்றவர்.

இணையம் வழி விற்பனை கூடியது

இங்குள்ள பெரும்பாலான பேரங்காடிகள், இணையவழி மளிகைக் கடைகள், உணவு விநியோகச் சேவைகள் ஆகியவற்றில் ஒரு வாரத்தில் விற்பனை கூடியுள்ளது.

செப்டம்பர் 27ஆம் தேதி கொவிட்-19 கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்ட பின்னர் பலரும் வெளியில் செல்லாமல் இணையம் வழியாக பொருட்களை வாங்கி வருவது அதற்குக் காரணமாகும்.

ஒரு வாரமாக அதிகரித்துள்ள தேவையைச் சமாளிக்க ஊழியர்களைத் தாங்கள் அதிகரித்துள்ளதாக ஃபேர்பிரைஸ், ரெட்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன. எனினும் பொருட்களுக்கான தேவை மாறிக்கொண்டே இருப்பதால் அவற்றைக் கொண்டு சேர்ப்பதற்கான நேரமும் மாறலாம் என்று ஃபேர்பிரைஸ் நிறுவனப் பேச்சாளர் கூறினார். சில வாடிக்கையாளர்கள், விநியோகக் கட்டணங்கள் கடந்த ஒரு வாரத்தில் உயர்ந்துகொண்டே வருவதாகக் குறிப்பிட்டனர்.

மூன்று மூதாட்டிகள் மரணம்;

புதிதாக 3,577 பேருக்குத் தொற்று

கொவிட்-19 தொற்று காரணமாக 68 முதல் 102 வயதிற்குட்பட்ட பெண்கள் மூவர் மாண்டுவிட்டனர். இதன்வழி, சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 133ஆக உயர்ந்தது.

அப்பெண்கள் மூவரும் தடுப்பூசி போட்டிருக்கவில்லை.

நேற்றுமுன் தினம் புதன்கிழமை புதிதாக 3,577 பேர்க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் 2,932 பேர் சமூகத்தில் இருப்போர், 630 பேர் விடுதிகளிலுள்ள வெளிநாட்டு ஊழியர்கள், 15 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக புதிய தொற்று எண்ணிக்கை 3,000க்கும் மேல் பதிவாகி இருக்கிறது.

நேற்று நண்பகல் நிலவரப்படி, கொரோனா தொற்றுக்காக 1,520 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 255 பேருக்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது; 37 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

எட்டுப் பெரிய கிருமித்தொற்றுக் குழுமங்களை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவற்றுள், ஆக அதிகமாக ஜூரோங்கில் உள்ள அஸ்ப்ரி - வெஸ்ட்லைட் பாப்பான் விடுதியில் புதிதாக 29 பேரை கொரோனா தொற்றியது.