டெல்டா உட்பட எல்லா உருமாறிய கொரோனா வகைகளையும் குணப்படுத்தக்கூடிய மாத்திரைக்கு சுகாதார அறிவியல் ஆணையம் ஒப்புதல் வழங்கிய பின்னர் அது இங்கு கிடைக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
'மோல்னுபிரவிர்' எனும் இந்த மாத்திரையை வாங்க எம்எஸ்டி மருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டதையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியது.
'மோல்னுபிரவிர்' மாத்திரை கொவிட்-19 கிருமி தன்னை நகல் எடுத்துக் கொண்டு பெருக உதவும் 'என்ஸைம்' அதாவது நொதியத்தைக் குறிவைக்கிறது.
அந்த நொதியத்தின் மரபணுத் தொடரில் மாத்திரை தவறுகளை ஏற்படுத்தி, நோயைக் குணப்படுத்துகிறது.
'காமா', 'டெல்டா', 'மூ' உள்ளிட்ட கொரோனாவின் எல்லா உருமாறிய வகைகளிலும் இந்த நொதியம் இருப்பதால், அவற்றுக்கு எதிராக மாத்திரை செயல் திறன் மிக்கதாய் உள்ளது.
தொற்றின் தொடக்கத்திலேயே உட்கொண்டால் மாத்திரை இன்னும் சிறப்பாகச் செயல்படுவதாக எம்எஸ்டி நிறுவனம் தெரிவித்தது.
கடும் நோய் ஏற்படக்கூடியவர் களில் பாதிப் பேர்க்கு நோயின் தீவிரத்தை அல்லது மரண அபாயத்தை இது குறைப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இடைக்கால பரிசோதனை முடிவுகள் காட்டுகின்றன.
எம்எஸ்டி மருந்து நிறுவனம் மருந்து பற்றிய தரவுகளை சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைத்து அதன் அனுமதியைப் பெற வேண்டும். நிறுவனம் தரவுகளை ஒப்படைக்கும் தேதியைப் பொறுத்து அனுமதி வழங்கப்படும் தேதியும் அமையும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

