மனநலப் பிரச்சினைகள் ஒருவர் வாழ்வில் பல வகைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஆகையால், அப்பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஒரு தேசமாக இணைந்து ஆதரவளிக்க வேண்டும் என அதிபர் ஹலிமா யாக்கோப் கூறினார்.
அரசாங்கத்திடமிருந்து உதவி பெறுவது ஒரு புறம் இருக்க, சமூகமும் இதில் பெரிய பங்காற்றலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
'சில்வர் ரிப்பன் சிங்கப்பூர்' ஏற்பாட்டில் நேற்று நிகழ்ந்த மனநலப் பிரச்சினைகள் குறித்த ஆசிய பசிபிக் மாநாடு, சந்திப்பு 2021ல் கலந்துகொண்டு இக்கருத்துகளை அவர் தெரிவித்தார்.
மூன்றாம் முறையாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பேசிய அதிபர், தேவையான ஆதரவோடு, சமூக சேவை நிறுவனங்கள், மனநலப் பிரச்சினைகள் உள்ளோருக்குச் சமூக அளவில் பராமரிப்பு வழங்கலாம் என்று கூறினார். மேலும், இந்நிறுவனங்கள் கொண்ட நெருக்கமான தொடர்புகளைப் பயன்படுத்தி அரசாங்க திட்டங்களைப் பெருக்க முன்வரலாம் என்றும் அவர் கூறினார்.
மனநலக் கழகத்தில் மனச்சோர்வு காரணத்தால் சிகிச்சை பெரும் இளையர்களின் எண்ணிக்கை 2015லிருந்து 2020 வரை 60% உயர்ந்துள்ளதாகவும் இது கவலை ஏற்படுத்தியுள்ளது என்றும் அதிபர் தெரிவித்தார்.
"இந்தச் சூழலைத் தடுத்து நிறுத்த சமூகமாக நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டும்," என அதிபர் கூறினார்.
'அதிபர் சவால்' 2018ல் அதன் கவனத்தை மனநலப் பிரச்சினைகள் மீது திருப்பியுள்ளதாகவும் அவற்றிற்கு ஆதரவளிக்கும் பல திட்டங்களுக்கு ஏறத்தாழ $1.8 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார்.
அதிபர் சவாலுடன் பங்காளியாக இணைந்து, மனநலப் பிரச்சினைகளுடைய இளையர்களைச் சமாளிக்க சமூக சேவை நிறுவனங்களுக்கான முன்னோடிப் பாடத்திட்டம் ஒன்றை உருவாக்க, தாம் மனநலக் கழகத்துக்கு அண்மையில் அழைப்பு விடுத்துள்ளதாக அவர் குறிப்பட்டார்.
சமூக சேவை நிறவனம், 'கேம்பஸ் பிஎஸ்ஒய்'யின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான திரு சோ மிங் சியு இதனைச் சிறந்த திட்டம் என்று பாராட்டினார். மேலும் இதுபோன்ற ஒரு பாடத்திட்டம் சமூக சேவை நிறுவனங்களிடையே சீரான தரநிலையை உறுதிப்படுத்தும்.
சமூக சேவை நிறுவனங்கள் நிதி, ஆள் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளைச் சந்தித்து வருவதாகவும் அவற்றைக் களைய மேலும் சில முயற்சிகளை எடுக்கலாம் என்றும் அவர் விளக்கினார்.
மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ நாம் அவர்களுக்குச் செவிசாய்த்து அவர்களுக்கு உரிய மதிப்பு, மரியாதையைக் கொடுக்கலாம் என நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேராசிரியர் ஃபாத்திமா கூறினார்.

