வருங்காலத்தில் கொள்ளைநோயை எதிர்கொள்ள வளங்களைத் தேவையான அளவுக்கு சேமித்து வைப்பது, பொதுச் சுகாதாரத்தில் சிறந்த பலன்களைப் பெறும் வகையில் முதலீடுகளைச் செய்வது போன்ற நோய் காப்பு நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் (படம்) வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, எதிர்கால சுகாதார நெருக்கடி நிலையைச் சமாளிக்க வட்டார மற்றும் பல நாடுகள் கொண்ட பல்லடுக்கு அமைப்பின் அடிப்படையில், அபாயங்களைப் பகிர்ந்துகொள்வது, தகவல்களை பரிமாறிக்கொள்வது போன்ற மேம்பட்ட கட்டமைப்புகளை வளர்க்க வேண்டும் என்று அமைச்சர் விளக்கினார்.
ஆசியான் மின்னிலக்க பொதுச் சுகாதாரம் என்ற கருப்பொருளில் சிறப்பு அமைச்சர்கள் மாநாடு புதன்கிழமையும் நேற்று வியாழக்கிழமையும் மெய்நிகராக நடைபெற்றது. அதில் பங்கேற்ற திரு லாரன்ஸ் வோங் மேற்கண்டவாறு பேசினார்.
வலுவான கண்காணிப்புக் கட்டமைப்பு, பல நாடுகள் பங்குகொள்ளும் நாணய பரிமாற்ற ஏற்பாடுகள் போன்றவற்றால் 1997ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆசிய நிதி நெருக்கடி சமாளிக்கப்பட்டது என்பதை திரு லாரன்ஸ் வோங் தமது உரையில் நினைவுகூர்ந்தார்.
"அதுபோல், பொதுச் சுகாதார நெருக்கடி நிலைகளையும் அவசர நிலைகளையும் எதிர்கொள்ள நாம் மேம்பட்ட கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
"இதை எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், மேம்பட்ட தகவல் பரிமாற்றம், வளங்களை, இடர்பாடுகளைப் பகிர்ந்துகொள்ளும் திட்டங்கள் இதில் அடங்கும்," என்று அவர் கூறினார்.
கொள்ளைநோயால் விநியோகச் சங்கிலி தடைப்பட்டு, உலக சந்தை வர்த்தகம் மீது நம்பிக்கை இழந்த சூழல் ஏற்பட்டதால், இனி எல்லாவற்றையும் ஒரு நாடு தனது எல்லைகளுக்கு உள்ளேயே செய்ய வேண்டும் என்று எண்ணக்கூடாது என்றும் அவர் நினைவூட்டினார்.
உயர்ந்து வரும் சுகாதாரப் பராமரிப்புச் செலவினத்தால் அதற்கு நிதி ஒதுக்குவது உலக நாடுகளின் அனைத்து நிதி அமைச்சர்களுக்கும் பெரிய கவலை என்பதை திரு வோங் ஒப்புக்கொண்டார்.
இதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய சுகாதாரப் பராமரிப்பு சேவை, அதை உயர் தரத்தில் குறைந்த செலவில் வழங்குவது என மூன்று இக்கட்டான அம்சங்கள் அடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
"சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்புத் தனிநபர்களும் ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பேற்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அது நாட்டின் பொறுப்பு மட்டுமல்ல," என்று அவர் விவரித்தார். கொவிட்-19 கொள்ளைநோய் கற்றுத்தந்த மூன்று பாடங்களையும் அவர் பட்டியலிட்டார்.
முதலாவதாக, செலவினம், கழிவுகளை மிச்சப்படுத்தி, பொதுச் சுகாதார நெருக்கடி நிலையை சமாளிக்க சுகாதாரப் பராமரிப்புத் துறையில் வளங்களை சேமித்து வைப்பது.
இரண்டாவதாக, குறைவான வளங்களை பாதுகாப்பாக வைத்து அடிப்படை சுகாதாரத்தை மேம்படுத்துவது. இதனால் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்க வேண்டியதில்லை. மூன்றாவதாக, சுகாதார செலவினத்தைப் பொறுத்தமட்டில், பலன்களைப் பெறக்கூடிய வகையில் முதலீடு செய்வது என்று அவர் கூறினார்.

