சீனா உட்பட ஆசிய பசிஃபிக் வட்டார நாடுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து செயல்படுவதுடன் வட்டாரத்தில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது முக்கியம் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.
"கலந்துரையாடுவது, பேச்சுவார்த்தை நடத்துவது, இருதரப்பு புரிந்துணர்வை வலுப்படுத்திக்கொள்வது, நாடுகளுக்கிடையிலும் அமெரிக்கா, வட்டார நாடுகளுக்கு இடையிலும் நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது ஆகியவற்றின் மூலம் முன்னேற்றம் காண முடியும்," என்று அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வர்த்தகச் சபைக்கு வருகை அளித்திருந்தவர்களிடம் அமைச்சர் கான் தெரிவித்தார்.
சீனா தொடர்பிலான அமெரிக்க வர்த்தகக் கொள்கை குறித்து வர்த்தகச் சபையின் துணைத் தலைவரும் அனைத்துலக விவகாரங்களுக்கான தலைவருமான திரு மிரோன் பிரில்லியண்ட் எழுப்பிய கேள்விக்கு திரு கான் இவ்வாறு பதிலளித்திருந்தார்.
இதுபோன்ற வர்த்தகப் பேச்சுவார்த்தை முயற்சி உடனே நடக்கக்கூடியது அல்ல என்றார் திரு கான். இதற்கு சிறிது காலமாகும் என்று குறிப்பிட்ட அமைச்சர் கான், அமெரிக்காவுக்கு பல்வேறு விவகாரங்களில் ஆர்வமுள்ளதாகத் தெரிவித்தார்.

