உணவுக் கடையில் பணிப்பெண் ஒருவர், இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில், தனது நான்கு விரல்களைப் பறிகொடுத்த சம்பவத்தை அடுத்து அந்தக் கடைக்காரருக்குச் சிறையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மின்சார சாதனத்தில் இறைச்சி அரைத்துக்கொண்டிருந்த ஊழியரை கடைக்காரர், அவசரப்படுத்தியதால்தான் இந்த அசம்பாவிதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. கடையில் சரியான முறையில் வேலையிடப் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே, லிம் ஷெங் சோங் என்ற 59 வயது கடைக்காரருக்கு இரண்டு வாரச் சிறையும் $19,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரரான சோங் மீது, வேலையிடப் பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டும் வெளிநாட்டு மனித வேலைவாய்ப்பு விதியை மீறியதாக இன்னொரு குற்றச்சாட்டும் சாட்டப்பட்டன.
மியன்மாரைச் சேர்ந்த சூ சூ மார் என்ற அந்தப் பணிப்பெண்ணை, லிம்மின் மகள் லிம் சோக் ஹோங், 36, என்பவர் வேலைக்கு எடுத்திருந்தார். ஆனால், அப்பணிப்பெண் ஹோங்கிடம் பணிபுரியவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது
2017ஆம் ஆண்டில் பணிப்பெண்ணை தமது வீட்டில் தங்க வைப்பதற்குப் பதில் லிம் ஷெங் சோங் மற்றும் அவரது 59 வயது மனைவி கோ சியூ இம், ஆகியோரின் வீட்டில் தங்கும்படி கூறினார்.
வீட்டு வேலை செய்வதற்காக வேலையில் அமர்த்தப்பட்ட பணிப்பெண்ணை, லிம் ஷெங் சோங்கின் மனைவி கோ, தனது கணவனின் உணவுக்கடைக்குத் தேவையானவற்றைத் தயார்செய்து கொடுக்குமாறு பணிப்பெண்ணுக்கு அறிவுறுத்தினார்.
பணிப்பெண்ணின் மாதச்சம்பளம் $600. ஆனால் அவர், பெரும்பாலும் அதிகாலை 2 மணியில் இருந்து இரவு 7 மணி வரை வேலை செய்யவேண்டியிருக்கும். அதற்காக அவருக்கு கூடுதல் சம்பளம் எதுவும் கொடுக்கப்படவில்லை.
உணவுக் கடைக்குத் தேவையானவற்றைத் தயார்ப்படுத்துவதற்காக அதிகாலை 2 மணிக்கு எழுந்து வேலை செய்யவேண்டும். இடையில் காலை 7 மணியில் இருந்து 9.30 மணி வரை மணி ஓய்வெடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டார். பின்னர் காலை 9.30ல் இருந்து இரவு 7 மணி வரை வேலை செய்ய வேண்டும்.
விரல்களைப் பறிகொடுத்த சம்பவம் 2019 ஜனவரி 31ஆம் தேதி நடந்தது. அன்றைக்கு, உணவுக் கலவையை அரவை இயந்திரத்தில் அரைப்பதற்காக வெண்ணெய் வெட்டப் பயன்படும் கத்தியால் அந்தக் கலவையை அந்த மின்சாதனத்திற்குள் தள்ளி விட்டார். அப்போது, அந்தக் கத்தி உள்ளே விழுந்து விட்டது. அதை எடுப்பதற்காக தனது வலது கையை ஓடிக்கொண்டிருந்த அரவைச் சாதனத்திற்குள் விட்டிருக்கிறார். அப்போது அந்தச் சாதனத்தின் கத்திகள் அவரது நான்கு விரல்களைத் துண்டித்துவிட்டன.

