கொவிட்-19 விதிமீறல்கள் - 84 பேர் மீது நடவடிக்கை

கொவிட்-19 விதிமீறல்கள் - 84 பேர் மீது நடவடிக்கை

1 mins read
24cb25ae-6780-4ca3-8fb0-8c42a684c4a7
-

தேசிய சுற்றுப்புற அமைப்பு, 84 தனிநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. பாதுகாப்பு இடைவெளி மீறல்களுக்கு எதிரான அந்த அமைப்பு, உணவங்காடி நிலையங்களில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 8) முதல் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 10) வரை கண்காணித்து வந்தது.

இரண்டு பேருக்கு அதிகமுள்ள கூட்டங்களாகக் கூடுவது, ஒரு மீட்டர் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பது, முகக்கவசங்களை அணியாதிருப்பது, முகக்கவசங்களை கீழே இழுத்தவாறு வைத்திருப்பது உள்ளிட்டவை அந்தக் குற்றங்கள் என தேசிய சுற்றுப்புற அமைப்பு இன்று வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நியூட்டன் உணவு நிலையம், வாம்போ உணவு நிலையம், ஹெய்க் ரோடு சந்தை மற்றும் உணவு நிலையம், கோல்டன் மைல் உணவு நிலையம், ஹொங் லிம் சந்தை மற்றும் உணவு நிலையம், சைனாடவுன் காம்பிளெக்ஸ் சந்தை மற்றும் உணவு நிலையம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களில் சிலர் விதிமுறைகளை மீறியதை அதிகாரிகள் கண்டனர்.

பொதுமக்களில் பெரும்பாலானோர் ஒத்துழைப்பதாகவும் ஒத்துழைக்காமல் வன்மையாக நடந்துகொள்பவர்கள் சிலரே என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது. வரும் புதன்கிழமை முதல் முழுமையாக தடுப்பூசி போடுபவர்கள் மட்டும் உணவங்காடி நிலையங்களில் அமர்ந்து உண்ணலாம் என்று அந்த அமைப்பு கூறியது. தடுப்பூசி போடாதவர்கள் அல்லது முதல் தடுப்பூசி மட்டும் போட்டுக்கொண்டவர்கள் உணவங்காடி நிலையங்களுக்குச் சென்று உணவு வாங்கலாம்.