வருங்காலத்தில் சிங்கப்பூரின் நிலத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இம்மாதம் முதல் பொதுமக்கள் தங்களின் கருத்துகளை முன்வைக்கலாம். மெய்நிகராக நடத்தப்படவுள்ள கலந்துரையாடல்களில் பொதுமக்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம். நகர மறுசீரமைப்பு ஆணையம் கலந்துரையாடல்களை நடத்துகிறது.
தனது நீண்ட கால நிலப் பபயன்பாட்டுத் திட்டங்களை ஆராய ஆணையம் பொதுமக்களிடம் கருத்துகளைச் சேகரிக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் இப்போது தொடங்குகிறது. அடுத்த 50 ஆண்டுகளையும் தாண்டி நிலத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கு வழிகாட்டியாக இத்திட்டங்கள் இருக்கும். ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் திட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்படும். மாறிவரும் சூழல், போக்குகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு திட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்படும்.
ஆணையம் எடுக்கும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டத்தில், சிங்கப்பூரின் வருங்காலத்தை வடிவமைக்க குறிப்பாக நான்கு அம்சங்களைக் கருத்தில் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அனைவரையும் உள்ளடக்குவது, சூழலுக்கேற்ப மாறிக்கொண்டு மீள்திறனுடன் இருப்பது, நீடித்த நிலைத்தன்மை, வித்தியாசமாகவும் பிறர் விரும்பும் வகையிலும் இருப்பது ஆகியவை இந்த நான்கு அம்சங்கள். பல பிரிவுகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கும் பொருந்தும் மலிவான, பல வகை வீடுகள் இருக்கும் பேட்டைகளை உருவாக்குவது அனைவரையும் உள்ளடக்கும் சிங்கப்பூராகும் என்று ஆணையம் குறிப்பிட்டது.
புதிதாக உருவெடுக்கும் பொருளியல், தொழில்நுட்பப் போக்குகளைக் கருத்தில் கொண்டு வருங்காலத்தில் வேலையிடங்களையும் வீடுகளையும் வடிவமைப்பது சூழலுக்கேற்ப மாறிக்கொண்டு மீள்திறனுடன் இருக்கும் சிங்கப்பூரைக் குறிக்கும் என்றும் நீடித்த நிலைத்தன்மை அம்சத்தைப் பொறுத்தவரை தனது தேவைகளைப் பூர்த்திசெய்யும் அதே வேளையில் தன்னிடம் இருக்கும் குறைவான வளங்களை உபயோகித்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் சிங்கப்பூர் செயல்படவேண்டும் என்றும் ஆணையம் சொன்னது.
மேலும், சிங்கப்பூர் தொடர்ந்து வர்த்தகர்களையும் சுற்றுப்பயணிகளையும் ஈர்க்கவேண்டும். அதே நேரத்தில் சிங்கப்பூரின் அடையாளம் வலுவாக இருக்கவேண்டும், குடிமக்களுக்குப் பழக்கமான நகராக அது விளங்கவேண்டும். இந்த வகையில் சிங்கப்பூர் வித்தியாசமாகவும் பிறர் விரும்பும் வகையிலும் இருக்கவேண்டும் என்று ஆணையம் கூறியது.
நிலப் பயன்பாட்டுத் திட்டங்களை ஆராயும் மெய்நிகர் கலந்துரையாடல்கள் இம்மாதம் 24ஆம் தேதி முதல் வரும் டிசம்பர் மாதம் நான்காம் தேதிவரை நடைபெறும். நடவடிக்கையின் முதற்கட்டம் கடந்த ஜூலை மாதம் முதல் சென்ற மாதம் வரை நீடித்தது. அதில் இடம்பெற்ற கருத்தாய்வில் 5,600க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர், கலந்துரையாடல்களிலும் பயிலரங்குகளிலும் சுமார் 200 பேர் பங்கேற்றனர்.

