'சிப்ஸ்' எனும் மின்சார சில்லுகளுக்கான தேவை உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிங்கப்பூரில் உள்ள பகுதி மின்கடத்தி நிறுவனங்கள் தங்களின் திறன் வளர்ச்சி முயற்சிகளை மேம்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவது, புதிய ஊழியர்களை ஈர்ப்பது ஆகிய இரண்டு அம்சங்களில் நிறுவனங்கள் கூடுதலாக கவனம் செலுத்துகின்றன.
ஊழியர்களின் திறன்களை வளர்ப்பதில் நிறுவனங்கள் அதிகம் செலவு செய்வதாக 'எஸ்எஸ்ஐஏ' எனும் சிங்கப்பூர் பகுதி மின்கடத்தித் துறை சங்கம் தெரிவித்தது. குறிப்பாக மின்னிலக்கமயமாதல் தொடர்பிலான அம்சங்களில் நிறுவனங்கள் அக்கறை காட்டுவதாக சங்கம் கூறியது. தானியக்கமயமாதல் உள்ளிட்ட துறைகள் மின்சார சில்லுகளை அதிகமாகப் பயன்படுத்துகின்றன.


