சிங்கப்பூருக்குள் கள்ளத்தனமாக துப்பாக்கி ஒன்றைக் கடத்திவர, குண்டர் கும்பலைச் சேர்ந்த சக உறுப்பினரோடு கூட்டு சேர்ந்த குற்றத்தை 27 வயது அமிருல் அஸ்சியாஃப் முகமது ஜுனுஸ் நேற்று ஒப்புக்கொண்டார்.
தமது குண்டர் கும்பலின் போட்டிக் கும்பலைச் சேர்ந்தோரை அச்சுறுத்த, எட்டுத் தோட்டாக்கள் கொண்ட 'ஷூடஸ் சீ ஹோக்' வகை துப்பாக்கி ஒன்றைச் சட்ட விரோதமாக வைத்திருந்த 26 வயது முகமது இக்ராம் அப்துல் அஸிஸுடன் கூட்டு சேர்ந்தார் அமிருல்.
மேலும் பொது இடத்தில் சிறிய தண்டம் (பேட்டன்) ஒன்றை வைத்திருந்த குற்றத்தையும் அமிருல் ஒப்புக்கொண்டார்.
இக்ராமுக்கு மார்ச் மாதம் ஏழாண்டு, 10 மாத சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. 12 ஆண்டுகளில் சட்ட விரோதமாக துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த முதல் சம்பவம் இதுவே.
அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் கட்டாய குறைந்தபட்ச தண்டனையான ஐந்தாண்டு சிறைத் தண்டனையையும் ஆறு பிரம்படிகளையும் அமிருலிக்கு விதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
சிங்கப்பூரர்களான இவ்விருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் தஞ்சோங் பகார் யுனைடெட் காற்பந்துக் குழுவில் இருவரும் 2012ல் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின், அமிருலும் இக்ராமும் ஒரே குண்டர் கும்பலில் சேர்ந்தனர்.
ஜனவரி 2019ல் மரினா ஸ்குவேரில் உள்ள கிளப் பலீஸா வெளியே ஃபாரிஸ் என்ற நபர் தமது முன்னாள் மனைவியைத் தாக்கியதை அமிருல் அறிந்தார். ஃபாரிஸ் வேறு குண்டர் கும்பலைச் சேர்ந்தவர் என்று தமது முன்னாள் மனைவி மூலம் அமிருல் அறிந்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்து வருத்தம் அடைந்த அமிருல், அதைப் பற்றி இக்ராமிடம் கூறி அறிவுரை கேட்டார்.
அமிருலின் இளம் மகளைக் கருத்தில் கொண்டு, கண்மூடித்தனமாக நடக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட இக்ராம், தாம் உதவிக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.
பிப்ரவரி 2019ல் இக்ராம் $1,400க்கு மலேசியாவில் ஒரு துப்பாக்கியை வாங்கி, அதைத் திருட்டுத்தனமாக சிங்கப்பூருக்குள் கடத்தி வந்தார். அதனை அமிருல் வீட்டிற்கு எடுத்துச் சென்று காண்பித்தார்.
அத்துப்பாக்கியைப் போட்டிக் குண்டர் கும்பலுடன் நிகழவிருந்த பேச்சுவார்த்தைக்கு எடுத்துச் செல்லுமாறு இக்ராம் கூறியபோது அமிருல் அதை மறுத்துவிட்டார்.
செப்டம்பர் 2019ல் அமிருல் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது, அவரிடம் சிறிய தண்டம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை அமிருல் தம் வீட்டில் கண்டெடுத்ததாகவும், தம்மையும் தமது காதலியையும் தற்காத்துக்கொள்ள அதை மலேசியாவுக்கு எடுத்துச் சென்றிருந்ததாகவும் அவர் கூறினார்.
2019, அக்டோபர் 8ஆம் தேதியன்று போதைப் பொருள் பயன்படுத்திய சந்தேகத்தில் இக்ராம் தடுப்புக்காவலில் இருந்தபோது குற்றங்கள் யாவும் வெளிச்சத்துக்கு வந்தன.
துப்பாக்கியும் தோட்டாக்களும் இக்ராமின் ஜூரோங் வெஸ்ட் அடுக்குமாடி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டன.
கூட்டுச்சேர்ந்த குற்றத்துக்கு அமிருலுக்கு ஐந்தாண்டிலிருந்து 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் குறைந்தபட்சம் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
பொது இடத்தில் சிறிய தண்டம் வைத்திருந்த குற்றத்துக்கு ஒரு மாதம் வரையிலான சிறைத் தண்டனையும் $5,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

