கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் வேலைப் பளு அதிகரித்துள்ளது.
கூடுதல் நோயாளிகளுக்குப் பணிவிடை செய்வது, வேலை நேரத்தைவிட கூடுதல் நேரம் பணிபுரிவது, விடுப்பு நாட்களிலும் வேலைக்குத் திரும்பும் நிலை ஏற்படுவது ஆகியவற்றால் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்குக் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
தமது மருத்துவமனைப் பிரிவில் கண்காணிக்கப்படும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்துள்ளதாக சிங்ஹெல்த் நிர்வகிக்கும் மருத்துவமனையில் பணிபுரியும் தாதியான ஏனி (உண்மையான பெயரல்ல) தெரிவித்தார். கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஒரே நேரத்தில் ஆறு நோயாளிகளை அந்த 24 வயது தாதியும் அவருடன் பணிபுரியும் சக ஊழியரும் பராமரித்தனர்.
ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
"இடைவேளைக்குச் செல்லக்கூட எங்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. சில சமயங்களில் கழிவறைக்குச் செல்லவும் மாட்டோம்," என்று ஏனி மனந்திறந்தார்.